Published : 22 Jun 2020 03:33 PM
Last Updated : 22 Jun 2020 03:33 PM
ஆணவக் கொலைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியா முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இப்படித் தீர்ப்பு வருவதற்கு அரசுத் தரப்பு இந்த வழக்கை சரியாக நடத்தாததே காரணம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றபோதிலும் உச்ச நீதிமன்றத்திலாவது குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர அரசுத் தரப்பு அக்கறை காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் ஆறு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியது. அதில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமியும் ஒருவர். தற்போது அவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. கூலிக்குக் கொலை செய்யும் கும்பலை ஏற்பாடு செய்த -கவுசல்யாவின் தாய், தந்தை மற்றும் தாய்மாமன் ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார் என்பது சிசிடிவி பதிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படாதது ஏன் எனத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது. தலித் மக்களுக்குரிய பாதுகாப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காததே அதற்கு முதன்மையான காரணம்.
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
'ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்' என அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறிய வேண்டும்; அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்; செய்தி கிடைத்ததும் டிஎஸ்பி அளவிலான தகுதியுள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்; அதையும் மீறி சாதிப் பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்க வேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும்; அந்தக் கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம்; பிரிவு 151-ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரண நடவடிக்கைகள்
தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141, 143, 503 மற்றும் 506-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தம்பதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் தொடங்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவதற்கான பாதுகாப்பைக் காவல்துறை தர வேண்டும்; தங்களது திருமணத்தை கவுரவத்தின் பெயரால் சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்.பி.க்கு அறிக்கை அளிக்க வேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்.பி. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிட வேண்டும்.
தண்டனை நடவடிக்கைகள்
இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிபடையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாதி மறுப்பு திருமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணிநேர 'ஹெல்ப்லைன்' வசதி இருக்க வேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கண்டிப்போடு உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய சட்ட ஆணையத்தால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ஆணவக் கொலைகள் தொடர்பான சட்ட மசோதாவை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை தொடர்பான மேல்முறையீடு உடனடியாக செய்யப்பட வேண்டும்; ஆணவக் கொலைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; ஆணவக் கொலை தொடர்பான மசோதாவை மத்திய அரசு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT