Published : 22 Jun 2020 03:24 PM
Last Updated : 22 Jun 2020 03:24 PM

கரோனாவைத் தடுக்க மதுரை மாநகராட்சி புது முயற்சி:  குடிசைப்பகுதி மக்களுக்கு மருந்துப் பெட்டகம் இலவசம்; மற்றவர்களுக்கு ரூ.100 விலை நிர்ணயம்

மதுரை மாநகராட்சியில் கரோனாவைக் கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொண்ட மருந்துப் பெட்டகத்தை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் சித்தா, அலோபதி, ஹோமியோபதி மருந்துகள் அடங்கிய இந்த மருந்துப் பெட்டகத்தை குடிசைப்பகுதி வாழ் மக்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு அதை ரூ.100 மதிப்பீட்டிலும் வழங்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பிரதான வீதிகள், சிறிய வீதிகள் என ஏறத்தாழ 5000 வீதிகள் உள்ளன. சுமார் 4 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் தற்போது வெறும் 211 பேருக்குதான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இந்த தொற்று நோய் பரவாமல் தடுக்க மாநகராட்சி சுமார் 1.50 லட்சம் குடியிருப்புகளை சார்ந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி, வைட்டமின் மாத்திரைகள், ஜிங் மாத்திரைகள், மற்றும் ஹோமியோபதி ஆர்சனிகா ஆல்பம்-30 மருந்துகள் ஏற்ககெனவே இலவசமாக வழங்கியுள்ளது.

தற்போது இந்த மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை குடிசைப்பகுதிகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.100 என்ற அடிப்படையிலும் வழங்கும் பணியை மாநகராட்சி இன்று தொடங்கியுள்ளது. இப்பணிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தனர். ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் 142 வரையறுக்கப்பட்ட குடிசைப் பகுதிகளிலும், 189 வரையறுக்கப்படாத குடிசைப் பகுதிகளிலும் உள்ளன. தற்போது மதுரையில் ‘கரோனா’ இரட்டை இலக்க எண்ணிக்கையில் வேகமாகப் பரவுவதால் முதற்கட்டமாக தற்போது மாநகராட்சி நிர்வாகம், இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அலோபதி மருத்துவ வகையில் வைட்டமின் மாத்திரைகளும், ஹோமியோபதி மருத்துவத்தில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளும், சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர், ஆடாதோடா, தாளி சாதி மாத்திரை உள்ளிட்டவை அடங்கிய மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு இந்த மருந்து பெட்டகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. தன்னார்வலர்களை ஒன்றிணைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசைப்பகுதி மக்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு இந்த மருந்து பெட்டகம் ரூ.100 என்ற அடிப்படையிலும் வழங்க உள்ளோம், ’’ என்றனர்.

மருந்துப் பெட்டகத்தில் உள்ள மருந்துகள் விவரம்:

மருந்து பெட்டகத் தொகுப்பில் உள்ள மருந்துகளின் விவரம்: 1) ஆடதோட மணப்பாகு 100 மில்லிகிராம் - 1 எண்ணம், 2) தாளிசாதி மாத்திரைகள் - 50 மாத்திரைகள், 3) கபசுர குடிநீர் சூரணம் - 50 கிராம், 4) ஜிங் மாத்திரைகள் - 10 மாத்திரைகள், 5) மல்டி விட்டமின் - 10 மாத்திரைகள் மற்றும் 6) ஹோமியோபதி ஆர்சனிகா ஆல்பம் 30 - 5 மில்லி கிராம் 1 குப்பி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x