Published : 08 Sep 2015 02:42 PM
Last Updated : 08 Sep 2015 02:42 PM
கோவை வ.உ.சி. மைதானப் பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டும், ஒன்று கூட பயன்பாட்டில் இல்லை. பூங்காவுக்கு வரும் மக்கள் அனைவரும் திறந்தவெளிக் கழிப்பிடங்களைத் தேடிச் செல்லும் நிலை நிலவுகிறது.
கோவை நகரின் மையப்பகுதியில் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக வ.உ.சி. பூங்கா உள்ளது. இங்கு, சிறுவர் விளையாட்டுப் பூங்கா, பொதுமக்களுக்கான பூங்கா, மைதானம், பிரத்யேக ஸ்கேட்டிங் மைதானம், உயிரியல் பூங்கா மற்றும் மூத்த குடிமக்களுக்கான பூங்கா என ஏராளமான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அம்சங்கள் உள்ளன.
விடுமுறை நாட்கள் மட்டுமில்லாமல் சாதாரண நாட்களிலே கூட, இங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். சுமார் 4.5 ஏக்கர் பரப்புடைய இப்பூங்கா வளாகத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்க, கழிப்பிடங்களைக் கண்டறிவது பெரும் சவாலாக இருக்கிறது. இங்கு ஒவ்வொரு பூங்காக்களிலும் தனித்தனியே கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பொதுவாக ஒரு கட்டணக் கழிப்பிடம், நவீனக் கழிப்பிடங்கள், ‘நம்ம டாய்லெட்’ கழிப்பிடங்கள் என சுமார் 10-க்கும் அதிகமான கழிப்பிடங்கள் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இவை அனைத்துமே காட்சிக்கு வைக்கப்பட்டது போல, பூட்டிக் கிடக்கின்றன அல்லது பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. இதனால் பெரும்பாலானோர் திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கட்டணக் கழிப்பிடத்தினுள் உள்ள தொட்டியில் கடந்த மாதம் ஒரு நபர் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கழிப்பிடமும் பூட்டிக் கிடக்கிறது. மூத்த குடிமக்கள் பூங்காவில் உள்ள கழிப்பிடம் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் மட்டும் திறக்கப்படும். அதைத்தான் பெரும்பாலானோர் காத்திருந்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ஜி.என்.மில்ஸ் பகுதி ‘தி இந்து’ வாசகர் கூறும்போது, ‘கோவை நகரில் அதிக செலவு தராத பொழுதுபோக்கு வ.உ.சி. மைதானம். வாரந்தோறும் குடும்பத்துடன் இங்கு வருகிறேன். ஒரு கழிப்பிடம் கூட இங்கு பயன்படுத்தும் நிலையில் இல்லை. திரும்பும் திசையெல்லாம் கழிப்பிடம் கட்டி வைத்து மட்டும் என்ன செய்ய முடியும்? ஒன்றைக் கூட பயன்படுத்த முடியவில்லை. தூய்மைக்காக கின்னஸ் முயற்சிகளைச் செய்யும் மாநகராட்சி, வ.உ.சி. பூங்காவை திறந்தவெளிக் கழிப்பிடமாக மாற்றி வருகிறது. குறிப்பாக பெண்கள் படும் அவஸ்தை மிக அதிகம்’ என்றார்.
உடனடி நடவடிக்கை?
இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி 72-வது வார்டு கவுன்சிலர் ஜெ.சசிரேகா கூறும்போது, ‘பூங்கா வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவச மற்றும் கட்டணக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை ஏன் பூட்டி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரியவில்லை. கட்டணக் கழிப்பிடத்தை தனியார் ஒப்பந்தம் எடுத்துள்ளனர். அதிலும் என்ன பிரச்சினை உள்ளது என்பது தெரியவில்லை. உடனடியாக அனைத்து கழிப்பிடங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேயர் ப..ராஜ்குமார் கூறும்போது, ‘இந்த பிரச்சினை குறித்து எந்த தகவலும் எனது கவனத்துக்கு வரவில்லை. உடனடியாக அவற்றை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT