Published : 22 Jun 2020 03:26 PM
Last Updated : 22 Jun 2020 03:26 PM
காரைக்குடியில் கரோனா தொற்று உறுதியான சென்னைவாசிகளின் குடும்பத்தினருக்கு சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின் பேரில் இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை 171-வது வார்டுக்குள் வரும் (சைதாப்பேட்டை தொகுதி) பேன்பேட்டை பகுதியில் வசிப்பவர்கள் பாண்டி மற்றும் முத்துவேல் குடும்பத்தினர். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேர் கடந்த 17-ம் தேதி காரில் காரைக்குடிக்குச் சென்றிருக்கிறார்கள். தங்களது உறவினரான ஓட்டுநர் கண்ணனின் காரில் பயணித்த இவர்கள் காரைக்குடியில் அண்ணாநகர் பகுதியிலுள்ள தங்களது உறவினர்களுக்குச் சொந்தமான காலி வீட்டில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் சென்னையிலிருந்து வந்திருப்பது தெரிந்ததுமே சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையினர், ஓட்டுநர் கண்ணன் உள்பட அத்தனை பேரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். கரோனா டெஸ்ட் முடிந்ததும் கண்ணன் மட்டும் சென்னைக்குத் திரும்பிவிட்டார்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து வந்தவர்களில் ஏழு வயதுப் பெண் குழந்தை உள்பட நான்கு பேருக்கும் ஓட்டுநர் கண்ணனுக்கும் கரோனா தொற்று இருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து, 19-ம் தேதி காலையில், தொற்றுக்கு உள்ளான பெண் குழந்தை உள்ளிட்ட நான்கு பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்குத் துணையாக (தொற்று பாதிக்கப்படாத) அவரின் அம்மாவும் கரோனா வார்டுக்கு அருகிலேயே இருந்து அவளைக் கவனித்து வருகிறார். இரண்டு வயதுக் குழந்தை உள்பட மற்ற ஆறு பேர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனின் நண்பரான சொ.கருப்பையா என்பவர் காரைக்குடி ஜீவா நகரில் திமுக வட்டச் செயலாளராக இருக்கிறார். சைதாப்பேட்டையிலிருந்து வந்தவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதுமே தகவலை மா.சுப்பிரமணியனின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் கருப்பையா.
இதையடுத்து, கரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் தவிர்த்து அந்தக் குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்துகொடுக்கும்படி கருப்பையாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் மா.சுப்பிரமணியன். இதன்படி அந்தக் குடும்பத்தினருக்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கனி உள்ளிட்ட ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இன்று காலையில், தனது அண்ணனும் நகர திமுக துணைச் செயலாளருமான சொ.கண்ணன் மற்றும் அண்ணாநகர் பகுதிக்கான திமுக முன்னாள் கவுன்சிலர் சொக்கு உள்ளிட்டோருடன் சென்று வழங்கினார் சொ.கருப்பையா.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய கருப்பையா, “சைதை மக்கள் வந்த இடத்தில் கரோனா சிக்கலில் சிக்கிக் கொண்டார்கள் என்றதுமே மா.சு. அண்ணன் பதறிவிட்டார். அந்தக் குடும்பத்தினர் ஏழ்மையானவங்க என்ற விஷயத்தையும் அவருக்கு எடுத்துச் சொன்னோம். உடனே அவர், ‘குடும்பத்து ஆட்களுக்குக் கரோனா இருப்பதாகச் சொல்லி அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களை யாரும் கவனிக்காமல் விட்டுடப் போறாங்க. அதனால அவங்களுக்கு உடனடியா என்ன தேவையோ அதை தாமதிக்காம செஞ்சு குடுத்துட்டு வேற என்ன உதவி வேணும்னாலும் கேளுங்கன்னு சொல்லி அவங்கள ஆறுதல்படுத்திட்டு வாங்க’ என்றார்.
அவரு சொன்னபடிக்கே, 20 கிலோ அரிசி, 500 ரூபாய்க்கு காய்கனிகள், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைச் சாமான்கள், இஞ்சி, எலுமிச்சை, பால், முட்டை, பிஸ்கட் உள்பட அத்தனை பொருட்களையும் வாங்கிக் குடுத்துட்டு வந்தோம். மா.சு. அண்ணன்தான் இதையெல்லாம் உங்களுக்குக் குடுக்கச் சொன்னாருன்னு சொன்னதும் அந்தக் குடும்பத்து ஆட்கள் ரொம்பவே நெகிழ்ந்து போய்ட்டாங்க. வேறு என்ன உதவிகள் வேணும்னாலும் உங்க ஏரியா கவுன்சிலர் சொக்குகிட்ட சொல்லுங்க நாங்க செஞ்சு குடுக்குறோம்னு சொல்லிட்டு வந்திருக்கோம்” என்றார்.
கருப்பையா தொடர்ந்து கூறுகையில், “இந்தக் குடும்பத்தினரைக் காரைக்குடிக்கு அழைத்து வந்த ஓட்டுநர் கண்ணன் சோதனை முடிவுகள் வரும் முன்பாகவே சென்னைக்குத் திரும்பிவிட்டார். அவருக்குக் கரோனா தொற்று இருக்கும் விஷயத்தை நாங்கள்தான் அவருக்குச் சொல்லி சென்னையில் அவரை தனிமைப்படுத்திக் கொள்ளச் சொன்னோம். அதன்படி அவர் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்திலிருந்து அவருக்கான பரிசோதனை முடிவை அனுப்பினால்தான் கண்ணனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்களாம். ஆனால், சோதனை முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் இங்கிருந்து சென்னைக்கு அறிக்கை அனுப்பாமல் இருக்கிறார்கள். இனியாவது பரிசோதனை அறிக்கையை அனுப்பி வைத்து கண்ணனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT