Published : 22 Jun 2020 10:58 AM
Last Updated : 22 Jun 2020 10:58 AM

பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற திட்டம்: மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை கைவிடுக; வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:

"17 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற, உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது இந்தியன் ரயில்வே. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள், அந்தத் துறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள், படிப்படியாக நிறைவேற்றப்படுவதைக் காட்டுகின்றது,

அதன் ஒரு கட்டமாக, ரயில்வே வாரியம் ஜூன் 17 புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற ஆணையில், இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் ரயில்களை, விரைவு ரயில்களாக மாற்றுவதற்கு, விரைந்து முடிவெடுத்து, இரண்டே நாட்களுக்கு உள்ளாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இருந்தது.

அவ்வாறு, விரைவு ரயில்களாக மாற்றினால், பயணிகள் கட்டணமும், இரண்டு மடங்கு உயர்த்தப்படும். எடுத்துக்காட்டாக, திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு, தற்போது 40 ரூபாய் கட்டணம். இனி அது 100 ரூபாயாக உயரும். அதுபோலவே, செங்கோட்டையில் இருந்து மதுரைக்கான கட்டணமும், 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விடும். விழுப்புரம் / திருப்பதி, புதுச்சேரி/ திருப்பதி, விழுப்புரம் திருநெல்வேலி, கோவை/ கண்ணனூர் என, அனைத்து ரயில்களிலும் கட்டணம் இரு மடங்காக உயரும்.

இந்திய ரயில்வே வாரிய நிதி ஆணையாளர் கடந்த 19-06-2020 அன்று, அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வேயில் செலவினங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று வழிகாட்டுதல் வழங்கி இருக்கின்றார். அதில் ஐந்தாவது பிரிவில் வரிசை எண் 'C'-ல் கூறி இருப்பதாவது:-

'வருமானம் இல்லாத பாதைகளில் ரயில் இயக்கத்தை நிறுத்தி, அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை- கோயம்புத்தூர் மற்றும் சென்னை- நாகர்கோவில் வழித்தடங்கள் மட்டுமே லாபம் ஈட்டக்கூடிய , வழித்தடங்கள் என்று ரயில்வே கருதுகின்றது.

மதுரை - ராமேஸ்வரம், திருச்சி - ராமேஸ்வரம், மதுரை - திருச்செந்தூர், மதுரை - கரூர் - ஈரோடு, திருச்சி - நாகூர், திருச்சி- கரூர், விழுப்புரம் - தஞ்சாவூர், விழுப்புரம் - காட்பாடி, மதுரை - செங்கோட்டை, விழுப்புரம் - திண்டிவனம், செங்கல்பட்டு- அரக்கோணம் போன்ற வழித்தடங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட பயணிகள் ரயில்களால் ரயில்வேக்கு போதுமான வருமானம் இல்லை என்பது உண்மை. ஆனால், சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள், கிராமப்புற மக்கள், மாணவர்கள் மற்றும் ஏழை எளிய தொழிலாளர்கள், ரயில்களைத்தான் நம்பி இருக்கின்றார்கள்.

மேலும், விரைவு ரயில்களாக மாற்றப்படுவதால், பெரிய ஊர்களில் மட்டுமே வண்டிகள் நிற்கும். அடுத்த நிலையில் இருக்கின்ற சிற்றூர் மக்கள், ரயில்களை மறந்து விட வேண்டியதுதான். இதனால், அன்றாட வணிகத்திற்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு, ரயில் பயணமே கட்டுபடியாகக் கூடியதாக இருக்கின்றது. கரோனா முடக்கத்தால், வருமானத்திற்கு வழியின்றி மக்கள் தவிக்கின்ற வேளையில், இத்தகைய நடவடிக்கைகள், தேவை அற்றவை, மக்கள் ஆட்சிக்கு எதிரானவை.

எனவே, மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும். பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவை பாலக்காடு வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் தொடரிகள் ஓடுவதற்கு, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம், சாலைப் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைக்கலாம் விபத்துகளைக் குறைக்கலாம். குறைந்த செலவில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x