Published : 21 Jun 2020 07:04 PM
Last Updated : 21 Jun 2020 07:04 PM

கரோனா தொற்றால் உயிரிழந்தோர்: சேவை மனப்பான்மையுடன் உடல் அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

சென்னை

சென்னையில் கரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களைச் சேவை மனப்பான்மையுடன் அடக்கம் செய்யும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தனிமைப்படுத்துதலில் உள்ள உறவினர்களுக்கு இது பெரிய உதவியாக இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர்.

கரோனா தொற்று உலக அளவில் ஆட்டிப் படைத்து வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்களை உலகம் முழுவதும் தனது கோரப் பசிக்குக் கொன்று குவித்துள்ள கரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஆறுதலான விஷயமாக தமிழகத்தில் குணமடைவோர் எண்ணிக்கை 55 சதவீதத்துக்கு மேல் உள்ளது. மரண விகிதமும் சமீபத்தில்தான் 1 சதவீதம் என்பதை அடைந்துள்ளது. ஆனாலும், இத்தகைய எண்ணிக்கையே கரோனாவின் கோர முகத்தை நம் கண் முன் காட்டுகிறது.

குடும்பத்தில் ஒருவருக்குத் தொற்று வந்த நிலையில் அது அனைவரையும் பாதிக்க, அவர்களும் தனிமைப்படுத்தப்பட, அதில் ஒருவர் உயிரிழந்தாலும் மற்றவர்கள் அவரது இறுதி நிகழ்வில்கூட கலந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மறைந்த பிரபலங்கள், கோடீஸ்வரத் தொழிலதிபர் அனைவர் வீட்டின் அனுபவமும் அதுதான். பாதிக்கப்பட்டவர் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லும்போது பார்த்ததுதான். உயிரிழந்த பின் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை என்பதே வேதனை. மறுபுறம் என்ன மத நம்பிக்கை இருந்தாலும் உயிர் போன பின்னர் மனித உடல் என்பதாக மட்டுமே பார்க்கப்பட்டு, பார்சல் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் உடல் அடக்கம் நடக்கிறது.

இதனால் உற்றார் உறவினர் அடையும் வேதனை சொல்லி மாளாது. இதை விட இன்னொரு வேதனையான விஷயம் பல இடங்களில் உற்றார் உறவினரே உடலை வாங்க மறுப்பதும் நடக்கிறது. மனித சமுதாயத்தின் அத்தனை மரபுகளையும் கரோனா உடைத்து வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தன்னார்வலர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள்.

அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று, அவர்களின் இந்தச் சேவை எண்ணத்தை அங்கீகரித்துப் பாராட்டு தெரிவிப்பது. அவர்களது சேவையைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு மற்றவர்களும் இதேபோன்று ஈடுபட வரலாம் என்கிற எண்ணம். இரண்டு, பாதிக்கப்பட்ட மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் யாரை அணுகுவது எனத் திகைத்து நிற்கும்போது இவர்கள் இருக்கிறார்கள் என அடையாளம் காட்டலாம்.

தமிழகத்தில் கரோனா மரணங்களில் 80 சதவீதம் சென்னையில் உள்ளது. சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். குடும்பத்தில் தந்தை கரோனாவால் உயிரிழக்க, மூத்த மகன் ஒரு இடத்திலும், அம்மா, இளைய மகன் ஆகிய இருவரும் மற்றொரு இடத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தந்தையின் உடலை எடுக்கப் பெரிய அளவில் பணம் பிடுங்கி பின்னர் கொண்டுபோய் எரித்துள்ளனர். மூத்த மகனும் உயிரிழக்க, 10 நாளில் சிதைந்துபோன குருவிக்கூடாக குடும்பம் ஆனது.

மரணச் செய்தி மட்டும் வருகிறது. பெரும்பாலும் உடல்கள் மாநகராட்சி மூலம் எரியூட்டப்படுகின்றன. இதுதான் இன்றைய யதார்த்தம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய எஸ்டிபிஐ கட்சியின் தன்னார்வலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட உடல்களை நல்ல முறையில் அவரவர் மத நம்பிக்கைப்படி அடக்கம் செய்யும் வேலையைச் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 15 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளனர். புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அதன் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஜுனைத் அன்சாரியிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் பேசியபோது அவர் கூறியது:

இதுவரை கரோனா வைரஸால் உயிரிழந்த எத்தனை பேரின் உடல்களை சென்னையில் அடக்கம் செய்துள்ளீர்கள்?

இதுவரை 39 பேரின் உடல்களை சென்னையில் அடக்கம் செய்துள்ளோம்.

வேற்று மதத்தவர் உடல்களையும் அடக்கம் செய்வீர்களா?

கண்டிப்பாக செய்வோம்.

இதுவரை எத்தனை மாற்று மதத்தவர் உடல்களை அடக்கம் செய்ய உதவியுள்ளீர்கள்?

15 நாட்களாக இதைச் செய்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு மாற்று மதத்தவர் உடல் எதுவும் அடக்கம் செய்யக்கேட்டு வரவில்லை. வந்தால் செய்யத் தயாராக இருக்கிறோம். புதுச்சேரியில் எங்கள் கட்சியினர் மாற்று மதத்தவர் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியினர் ஒத்துழைப்பு உங்களுக்கு ஏதாவது உள்ளதா?

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு அவர்கள் வாகனம் மூலம் கொண்டு வந்து தருவது, மற்றும் உடல்கள் அடக்கத்திற்கான சான்றிதழ் பெற்றுத்தருவது போன்ற உதவிகளைச் செய்கிறார்கள். அதைத் தாண்டி நாங்களும் எதுவும் கேட்பதில்லை. அவர்களும் எதுவும் உதவி செய்வதாகச் சொல்வதில்லை.

கவச உடை, மருந்து, சானிடைசர் போன்ற அடிப்படை உதவி எதுவும் தருகிறார்களா?

இரண்டு உடைகள் மட்டும் தருகிறார்கள். ஆனால், ஒரு உடலை அடக்கம் செய்ய 8 பேர் செயல்படுகிறோம். 8 கவச உடைகள் எங்களுக்குத் தேவை. மீதி உடைகளை, மற்ற உபகரணங்களை எங்கள் சொந்தச் செலவில் வாங்கிக்கொள்கிறோம்.

எத்தனை பேர் சென்னையில் செயல்படுகிறீர்கள்?

8 குழுக்களைச் சென்னையில் அமைத்துள்ளோம். இதில் ஒரு குழுவுக்கு 8 நபர்களை அமர்த்தியுள்ளோம். அவர்கள் ஆரோக்கியமானவர்களாக, நீண்டகால நோய்த்தொற்று இல்லாதவர்களாக, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாகப் பார்த்துப் பயன்படுத்துகிறோம்.

அவர்களுக்குச் சரியான முறையில் கவச உடை, மருந்துகள் அளிப்பது, அடக்கத்துக்குப் பின் கவச உடையைப் பாதுகாப்பாக நீக்குவது உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இதுகுறித்து தமிழக அளவிலான நிலை குறித்து சென்னை மண்டலச் செயலாளர் கறீமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மொத்தம் எத்தனை பேரை அடக்கம் செய்துள்ளீர்கள்?

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்களை அடக்கம் செய்துள்ளோம். சென்னையில் 39 பேர் இருக்கும். இவையல்லாமல் புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்டோரின் உடல்களை அடக்கம் செய்துள்ளோம்.

மற்ற மதத்தவர் உடல்களை எப்படி அடக்கம் செய்கிறீர்கள்?

தமிழகத்தில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் உடல்களைத்தான் அடக்கம் செய்யச் சொல்கிறார்கள். மற்ற மதத்தவர் உடல்கள் வந்தால் நாம் அடக்கம் செய்யத் தயாராகத்தான் இருக்கிறோம். புதுச்சேரியில் அடக்கம் செய்த 10 பேரின் உடல்களில் 6 பேரின் உடல்கள் மற்ற மதத்தவர் உடல்கள்தான். அதில் ஒரு பெண்ணின் உடலைத் தகனம் செய்து உள்ளோம். ஆகவே, எங்களுக்கு மதப் பாகுபாடு கிடையாது.

அரசின் உதவி எப்படி உள்ளது?

அரசு உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு வந்து கொடுப்பதோடு ஒதுங்கி விடுகிறது. இதில் கவச உடை கூட நாங்கள் தான் வாங்க வேண்டி உள்ளது. கவச உடை அணியும் முன் அணிவதற்காக ஒரு டி ஷர்ட், டிராக் ஷூட் அணிந்து பின்னர் கவச உடை அணிகிறோம். அடக்கத்துக்குப் பின் அனைத்தையும் ஒன்றாகப் புதைத்துவிடுவோம்.

கவச உடை, சானிடைசர், மருந்துகள், உறவினர்கள் வரும்போது அவர்களுக்கான கவச உடை அனைத்தும் கட்சி செலவில் தான் செய்கிறோம். சில தனியார் மருத்துவமனைகள் மருந்துகள் கொடுக்கிறார்கள்.

இந்தப் பணியை எப்போது தொடங்கினீர்கள்?

இரண்டு சம்பவங்கள் மூலமாக இதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒன்று, மருத்துவர் சைமன் உடல் புதைப்பின்போது நடந்த சம்பவம். மக்கள் பணியில் அவரது சேவை அளப்பரியது. அவர் செய்த உதவிகளை நாங்கள் அறிவோம். ஆனால், அவர் உடலைப் புதைப்பதில் நடந்த விரும்பத்தகாத சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வேதனையைத் தந்தன.

அடுத்து புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலைக் குழிக்குள் தூக்கி வீசி எறிந்த சம்பவம் உடனடியாக இதில் ஈடுபடத் தூண்டியது. அதன் பின்னர்தான் நாங்கள் இதுபோன்று உடலை அடக்கம் செய்யும் பணியில் இறங்கினோம்.

15 நாட்களில் சென்னையில் 39 பேரின் உடல்கள், தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்டோரின் உடல்கள், புதுவையில் 10-க்கும் மேற்பட்டோரின் உடல்களை அடக்கம் செய்துள்ளோம்.

உங்களைப் பாதித்த விஷயம் எது?

சொல்லக்கூடாது என்று நினைத்தேன், சொல்ல வைக்கிறீர்கள். பலர் உயிரிழந்த பின் அவரது நெருங்கிய உறவினர்கள்கூட உடலைப் பார்க்கக் கூட வருவதில்லை. தனிமைப்படுத்தப்பட்டோர் வர முடியாத நிலை, ஆனால் நன்றாக இருப்பவர்கள் கூட மருத்துவமனைக்கு வர அஞ்சுகிறார்கள். உடல் அடக்கம் நடக்கும் இடத்திற்கு எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.

குழிதோண்டப் பணம் கட்டுகிறார்கள். அவ்வளவே. சிலர் வந்தாலும் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு வராமல் சாலையிலேயே நின்று விடுகிறார்கள். உடலைப் பார்க்கக்கூட அஞ்சி, வராத சூழ்நிலையைப் பார்க்கும்போது மனித வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

உறவினர்களே வர அஞ்சும் பணியைச் செய்யும் உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

பயப்படுகிறார்கள், உங்களுக்கு ஏன் இந்த வேலை எனத் திட்டுகிறார்கள். எங்கள் வீட்டிலும் வயதானவர்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? நாங்கள் மிக எச்சரிக்கையாக அனைத்து கிருமிநீக்க நடவடிக்கைகளையும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றாலும் ஒரு ஊசி முனை அளவு தவறு நேர்ந்தாலும் பாதிப்பு வந்துவிடும் என்பதால் அனைவருக்கும் இருக்கும் நியாயமான பயம் குடும்பத்தாருக்கும் உள்ளது. என்ன செய்ய அனைவரும் பொதுச்சேவைக்கு வந்துவிட்டோம்.

இதுபோன்ற பாதிப்பில் உள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்ள தொடர்பு எண்கள்?

தாரளமாகப் பதிவிடலாம். சென்னையின் நிர்வாகிகள் எண் தருகிறோம். அவர்களை யார் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு கறீம் தெரிவித்தார்.

அரசு கரோனா தொற்று சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்துவருகிறது. அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் இவர்கள் சுமையைக் குறைக்க கவச உடைகள், நோய் எதிர்ப்பு மருந்துகள், சானிடைசர்கள் போன்றவற்றை அளித்தால் அதற்குச் செலவழிக்கும் பணத்தை அவர்கள் வேறு நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்கள் என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது.


தொடர்பு எண்கள்:
எஸ்.டி.பி.ஐ சென்னை மண்டலம்
ஜுனைத் அன்சாரி: 9080228910
ரஷீத்: 9677188889
ராஜா துறைமுகம்: 9840753045

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x