Published : 21 Jun 2020 05:01 PM
Last Updated : 21 Jun 2020 05:01 PM
தஞ்சாவூரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதை சாக்கடை கழிவுநீர்க் குழாய் உடைப்பெடுத்து ஒரு வார காலமாக கல்லணை கால்வாய் ஆற்றில் கலந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, அந்தப் பகுதியை தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் இன்று (ஜூன் 21) நேரில் பார்வையிட்டு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் இருந்து புதை சாக்கடை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீர், ராட்சதக் குழாய்கள் மூலம் தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரி சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றின் மேல் செல்லும் கழிவுநீர்க் குழாய், கடந்த ஒரு வாரமாக உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆற்று நீரில் கலந்து செல்கிறது.
இதன் காரணமாக நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஆற்றுநீரில் குளிக்கும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் புதை சாக்கடை குழாய் உடைப்பெடுத்த பகுதியைப் பார்வையிட்டு அங்கிருந்து மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து உடனடியாக ஆற்றில் கலக்கும் கழிவுநீரைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.கே.ஜி.நீலமேகம் கூறுகையில், ''தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற பணிகளைப் பராமரிக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள் தற்போது தஞ்சாவூரிலேயே இல்லாத நிலையில் மிகப்பெரிய அளவில் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கல்லணைக் கால்வாய் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இப்பிரச்சினையில் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, கழிவுநீர் குழாயைச் சீரமைக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT