Published : 21 Jun 2020 04:02 PM
Last Updated : 21 Jun 2020 04:02 PM
சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று கொடைக்கானலில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் சூரியனின் நிகழ்வுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 38 சதவீதம் சூரிய கிரகணம் பதிவானது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு விஞ்ஞானிகள் பலர் வானிலை குறித்து ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று விஞ்ஞானிகள் சூரியன் குறித்து ஆறு தொலைநோக்கிகள் மூலம் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.
சூரியகிரகண நிகழ்வுகளை ஒவ்வொரு அசைவாக தொலைநோக்கி உதவியுடன் படம்பிடித்தனர். காலை 10.22 மணிக்கு தொடங்கிய சூரியகிரகணம் குறிப்பிட்ட நேரத்தில் 38 சதவீதத்தை அடைந்தது.
இதையடுத்து கொடைக்கானலில் வானத்தை மேகங்கள் சூழ்ந்ததால் சூரியகிரகண நிகழ்வுகளைத் தொடர்ந்து பதிவு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் எபினேசர், குமரவேல் ஆகியோர் கூறியதாவது: கரோனா வைரஸ் காரணமாக சூரிய கிரகணத்தை காண்பதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆறு தொலைநோக்கிகள் மூலம் சூரிய கிரகணம் படம்பிடிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆய்வு செய்யப்பட்டது. 38 சதவீதம் அளவிற்கு சூரிய கிரகணம் பதிவான போது மேகங்கள் சூழ்ந்ததால் சூரிய கிரகணத்தை முழுமையாக பதிவு செய்யமுடியவில்லை, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT