Published : 21 Jun 2020 04:06 PM
Last Updated : 21 Jun 2020 04:06 PM

ஆறு ஆண்டுகளாக சரியான பதில்‌ அளிக்காமல்‌ உணர்ச்சிகரமாகப் பதிலளிக்கிறீர்கள்: பிரதமர் மோடி மீது கமல் விமர்சனம்

ஆறு ஆண்டுகளில்‌ எந்த ஒரு கேள்விக்கும்‌, சரியான பதில்‌ அளிக்காமல்‌, உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள்‌ என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

"கல்வான் எல்லைப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது" என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டது என்று மறுப்புத் தெரிவித்தது.

இதனிடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினைத் தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கல்வான்‌ பள்ளத்தாக்கில்‌ நிலவும்‌ பதற்றம்‌ நாடு முழுவதும்‌ எதிரொலிக்கிறது. கல்வான்‌ பள்ளத்தாக்கே இந்தியப் பகுதி இல்லை என சீனா அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. இந்த நிலையில்‌ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்‌ பிரதமர்‌ கூறியிருக்கும்‌ கருத்துகள்‌ ஜூன்‌ 16-17 தேதிகளில்‌, ராணுவ அதிகாரிகளும்‌, வெளியுறவுத்‌ துறை அமைச்சரின்‌ அறிக்கைகளிலிருந்து முரண்பட்டிருக்கிறது. பிரதமர்‌ பேசி முடித்து 10 மணி நேரம்‌ கழித்து பிரதமர்‌ அலுவலகம்‌ அது அப்படி சொல்லவில்லை, என விளக்கவுரை கொடுத்துக்‌ கொண்டிருக்கிறது. அதே நேரத்தில்‌ எதிர்க்கட்சிகளின்‌ கேள்விகளும்‌ இதைச்‌ சுற்றி நடக்கும்‌ அரசியலும்‌ வீரர்களின்‌ மன உறுதியைக் குலைத்துவிடும்‌ என்று கவலை கொள்கிறது பிரதமர்‌ அலுவலக செய்திக்குறிப்பு.

தெளிவான சிந்தனை தேவைப்படும்‌ போதெல்லாம்‌, உணர்வுகளைத்‌ தூண்டிவிட்டுத் தப்பிக்க முயல்வதை பிரதமரும்‌, அவரது சகாக்களும்‌ நிறுத்த வேண்டும்‌. இது ஒருமுறை அல்ல, கடந்த ஆறு ஆண்டுகளில்‌ எந்த ஒரு கேள்விக்கும்‌, சரியான பதில்‌ அளிக்காமல்‌, உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள்‌.

ஒவ்வொரு முறையும்‌ கேள்வி கேட்பவர்களை தேசத்திற்கே விரோதியைப்‌ போல்‌ ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறீர்கள்‌. ஆனால்‌ அது ஜனநாயகத்தின்‌ அடிப்படை என்பதை என்றும்‌ மறந்துவிடாதீர்கள்‌.

எதிலும்‌ மக்களின்‌ நன்மைக்கான திட்டம்‌ இல்லாமல்‌, உணர்வுகளைத்‌ தூண்டும்‌ உங்கள்‌ பேச்சுதான்‌ இந்தச் சூழ்நிலையிலும்‌ நடக்கிறது. கேள்வி கேட்பவர்கள்‌, வீரர்களின்‌ மன உறுதியைக் குறைப்பதற்காகக் கேட்கவில்லை. என்‌ வீரர்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கேட்கிறேன்‌. இந்த அரசு எல்லையில்‌ நிலவும்‌ பதற்றத்தைத் தணிக்க என்ன செய்ய போகிறது? வீரர்களைச் சந்தேகப்படாதீர்கள்‌ என்ற பதில்‌ எங்களுக்குத்‌ தேவையில்லை.

இந்திய ராணுவத்தின்‌ வீரத்தையும்‌, தீரத்தையும்‌ நன்கு அறிந்தவர்கள்‌ நாங்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ உயிரை வைத்து நீங்கள்‌ அரசியல்‌ விளையாடாமல்‌ பாதுகாக்கவே இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்‌.

1. இதுவரை இந்தியப் பிரதமர்‌ எவரும்‌ செல்லாத அளவிற்கு அதிக முறை சீனாவுக்குச் சென்று வந்தீர்களே. அப்படியிருந்தும்‌ இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க உங்களால்‌ ஏன்‌ முடியவில்லை?

2. கடந்த ஆண்டு சீன அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து, நட்புறவை வளர்க்கப் பேச்சுவார்த்தைகள்‌ நடத்தினீர்களே, அது எதுவும்‌ உதவவில்லையா?

3. நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளுக்கும்‌ சுற்றுப்பயணம்‌ மேற்கொண்டாலும்‌, உங்களது முயற்சி தோல்விதானா?

பேச்சுவார்த்தைகள்‌ மூலமாகவோ, நட்புறவு மூலமாக நீங்கள்‌ செய்ய வேண்டியதைத்தான்‌ இந்திய இராணுவத்தின்‌ வீரர்கள்‌ உயிரைத்‌ தியாகம்‌ செய்து செய்து கொண்டிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ உயிரைப்‌ பாதுகாக்க நீங்கள்‌ என்ன செய்தீர்கள்‌ என்று கேட்கிறேன்‌. தேசத்தின்‌ பாதுகாப்பைப் பாதிக்காத, அதே நேரத்தில்‌ நடந்த உண்மை நிகழ்வுகளை, பதற்றம்‌ மிகுந்த இந்த நேரத்தில்‌ பகிர்ந்துகொள்வது மக்களிடையே தேவையற்ற வதந்திகள்‌ பரவுவதைத் தடுக்கும்‌, அரசு தயார்‌ நிலையில்‌ இருப்பதை எடுத்துரைக்கும்‌. வரி செலுத்தும்‌ குடிமகனாக இதைக்‌ கேட்பதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது.

ராணுவத்தை நம்புங்கள்‌, அவர்கள்‌ பார்த்துக்‌ கொள்வார்கள்‌ போன்ற பொறுப்பில்‌ இருந்து நழுவும்‌ பதிலளிப்புகள்‌ இல்லாமல்‌, ஒரு மிகப்பெரிய தேசத்தின்‌ பிரதமராக, உங்கள்‌ பொறுப்பை உணர்ந்து இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறீர்கள்‌ என்று சொல்லுங்கள்‌".

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x