Published : 21 Jun 2020 12:16 PM
Last Updated : 21 Jun 2020 12:16 PM
வேடந்தாங்கல் சரணாலயப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த தொழிற்சாலைகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற விதிகளை மீறி, அங்கு இரு தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி அளித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும், தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வனத்துறை செயலாளர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:
“காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடப்பு ஜூன் மாதத்தில் நான் எழுதும் இரண்டாவது கடிதம் இதுவாகும். கடந்த 12 ஆம் தேதி மேற்குறிப்பிடப்பட்ட முகவரியில் உள்ள இரு வனத்துறை அதிகாரிகளுக்கும் நான் எழுதிய கடிதத்திற்கு இன்று வரை பதில் வராத நிலையில்தான் இந்த இரண்டாவது கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 1998 ஆம் ஆண்டு அறிவிக்கை செய்யப்பட்டதாகும். அப்போது வேடந்தாங்கல் ஏரி அமைந்துள்ள 73 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய 5 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 கி.மீ. சுற்றளவும் மையப்பகுதியாகவே கருதப்படுகிறது.
அந்த மையப்பகுதியை 3 கி.மீ. சுற்றளவாக வனத்துறை முடிவு செய்திருக்கிறது என்றும், அது பறவைகள் நலனைப் பாதிக்கும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அது பறவைகள் நலனுக்குப் பாதிப்பாக இருக்கும் என்பதால் அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதலில் அறிக்கை வாயிலாகவும், பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் வாயிலாகவும் கோரியிருந்தேன்.
அதுமட்டுமின்றி, ஏற்கெனவே வேடந்தாங்கல் சரணாலயப் பகுதியில் உள்ள சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாகவே, வேடந்தாங்கல் சரணாலயப் பகுதி வகைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், தடை செய்யப்பட்ட சரணாலயப் பகுதியில் இரு தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது குறித்தும் விளக்கமளிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால், இன்று வரை அவை குறித்து தமிழக வனத்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. வேடந்தாங்கல் சரணாலயப் பகுதி தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ள தகவல்களை மறைப்பது நியாயமானது அல்ல.
அதேநேரத்தில் 18.06.2020 தேதியிட்ட வனத்துறையின் விளக்கத்தில் வேடந்தாங்கல் சரணாலயப் பகுதி வகைப்படுத்தப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கூட சரணாலயப் பகுதி எதற்காக என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மாறாக, இப்போதுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் முதல் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை மையப் பகுதியாகவும், அடுத்த இரு கிலோ மீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப் படுத்த முடிவு செய்திருப்பதாகவும் அந்த விளக்கத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.
எந்த உண்மையை மறைப்பதற்காக ஒரே விளக்கத்தை, அதுவும் தவறான விளக்கத்தை வனத்துறை மீண்டும், மீண்டும் அளித்துக் கொண்டு இருக்கிறது என்பது தெரியவில்லை. மீண்டும், மீண்டும் தவறான ஒரு செயலை சரியான செயலாக காட்டுவதன் மூலம் மக்களை ஏமாற்ற முடியும் என்று வனத்துறையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நினைத்தால், இறுதியில் ஏமாறப் போவது அவர்களாகத் தான் இருப்பார்கள்.
வேடந்தாங்கல் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப் படப்போவதில்லை என்றும், மாறாக இப்போதுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் முதல் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை மையப் பகுதியாகவும், அடுத்த இரு கிலோ மீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப்படுத்த முடிவு செய்திருப்பதாக வனத்துறை மீண்டும், மீண்டும் கூறி வருகிறது.
வேடந்தாங்கலில் சுற்றுச்சூழல் பகுதி (Eco Sensitive Areas- ESA) உருவாக்கப்பட வேண்டும் என்றால், அது ஏற்கெனவே சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியில் தான் செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக வனத்துறையோ, இருக்கும் 5 கி.மீ. சுற்றளவில் இந்த பகுதிகளை உருவாக்க நினைப்பதுடன், அதை நியாயப்படுத்தவும் முயல்கிறது. இது சரியல்ல.
இறுதியாக, வேடந்தாங்கல் சரணாலயப் பகுதியில் இயங்கி வரும் சன் ஃபார்மா தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கும், சரணாலயப் பகுதி வகைப்படுத்தப்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அந்த ஆலை 1993 ஆம் ஆண்டு முதலே அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது என்றும் வனத்துறை விளக்கமளித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்திற்காக வனத்துறை இந்த அளவுக்கு வலிந்து விளக்கம் அளிப்பது தான் இந்த விஷயத்தில் உள்ள ஐயத்தை அதிகரிக்கச் செய்கிறது. வேடந்தாங்கல் ஏரி சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே சன் ஃபார்மா மருந்து தொழிற்சாலை அங்கு செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
ஆனால், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் 17.25 ஏக்கர் பரப்பளவில் ஆலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதில் 37.20%, அதாவது 6.42 ஏக்கர் நிலம் சரணாலயப் பகுதியில் உள்ள பசுமைப் பகுதியில் வருகிறது. சன் ஃபார்மா நிறுவனத்தின் விரிவாக்கப்பகுதி சரணாலயப் பகுதிக்குள் உட்புறத்தில் 0.72 கிலோ மீட்டர் தொலைவிலும், ஏரியிலிருந்து 3.72 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இந்தப் பகுதியில் எந்த விரிவாக்கத் திட்டத்திற்கும் இடம் அளிக்க முடியாது. இந்த சூழலை மாற்றி சன் ஃபார்மா நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிப்பதற்காகத் தான் சரணாலயப் பகுதியின் கடைசி இரு கிலோ மீட்டர் சுற்றளவை சாதாரணப் பகுதியாக மாற்ற வனத்துறை முயல்கிறது என்று குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அந்தக் குற்றச்சாட்டுக்கு வனத்துறை இதுவரை பதில் அளிக்காதது ஏன்?
அதேபோல், வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால், விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டு ஆம்கோ பேட்டரீஸ் ஆலை 2010 ஆம் ஆண்டிலும் ஆர்டைன் ஹெல்த்கேர் தொழிற்சாலை 2011ஆம் ஆண்டிலும் திறக்கப்பட்டுள்ளன.
சரணாலயப் பகுதிகளுக்குள் இந்த ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? பறவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த விதிமீறலுக்கு துணை போனவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கு வனத்துறை பதிலளிக்க மறுப்பது ஏன்?
வேடந்தாங்கல் சரணாலயப் பகுதியை மறுவகைப்பாடு செய்வதிலும், அதன் பின்னணியில் சில தொழிற்சாலைகளின் வணிக நலன்களுக்கு துணை போவதிலும் வனத்துறையின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும்.
அதற்காக, தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்; விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது. 2010 ஆம் ஆண்டில் ஆம்கோ பேட்டரீஸ் நிறுவனத்திற்கும், 2011 ஆம் ஆண்டில் ஆர்டைன் ஹெல்த்கேர் தொழிற்சாலைக்கும் அனுமதி அளித்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வனத்துறை ஆணையிட வேண்டும்.
இல்லாவிட்டால், இந்த விஷயத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர உயர்நீதிமன்றத்தை சட்டப்பூர்வமாக அணுக வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT