Published : 21 Jun 2020 07:16 AM
Last Updated : 21 Jun 2020 07:16 AM
மதுரையில் நேற்று முன்தினம் வரை கரோனாவுக்கு 550 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 345 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவத் தொடங்கிய கால கட்டத்தில் இத்தொற்றால் முதல் உயிரிழப்பு மதுரையில்தான் நடந்தது. ஆனால் முழு ஊரடங்கின்போது கரோனா தொற்றின் வேகம் குறைந்தது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். மேலும் சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களை பரிசோதனை செய்யாமல் அரசு அனுப்பி வைத்தது. அதனால், சென்னையில் இருந்தும், மகாராஷ்டிராவில் இருந்தும் வந்தவர்களால் மதுரையில் கரோனா வேகம் அதிகரித்தது.
மதுரையில் கடந்த 9-ம் தேதி 16 பேர், 10-ம் தேதி 10 பேர், 11-ம் தேதி 19 பேர், 12-ம் தேதி 33 பேர், 13-ம் தேதி 15 பேர், 14-ம் தேதி 16 பேர், 15-ம் தேதி 33 பேர், 16-ம் தேதி 20 பேர், 17-ம் தேதி 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 18-ம் தேதி 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அதனால், இனி கரோனா தொற்று வேகம் குறையும் என எதிர்பார்த்த நிலையில் மதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகள், நோயாளிகள் பெயர் விவரம் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆனால் நேற்று முன்தினம் சுகாதாரத் துறை சென்னையில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் 94 பேருக்குப் பதிலாக 58 பேர் மட்டும் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: மதுரையில் தற்போது பரிசோதனைகள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் முதல் முதலாக 2,500 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டனர். அதனால், இனி நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகத்தான் வரும். அதை வெளிப்படையாக அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு கரோனா தொற்று பரவலும், அதன் வீரியமும் தெரியும். பாதுகாப்பாகவும், கவனமாகவும் செயல்படுவார்கள் என்றனர்.
ஒரே நாளில் 90 பேருக்கு கரோனா
மதுரையில் இதுவரை ஒற்றை இலக்கத்திலும், 50-க்கும் குறைவான எண்ணிக்கையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 58 பேருக்கு தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று மேலும் அதிகரித்து ஒரே நாளில் 90 பேருக்கு இந்த தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT