Published : 20 Jun 2020 07:15 PM
Last Updated : 20 Jun 2020 07:15 PM
இ-பாஸ் இல்லாமல் வரும் வாகன ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி) பெரியய்யா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 20) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் மேற்கு மண்டலக் காவல்துறையில் உள்ளன. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியக் காரணங்கள் இன்றி சாலைகளில் சுற்றியதாக மேற்கு மண்டலத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 85 ஆயிரத்து 706 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதத் தொகையாக 96 லட்சத்து 99 ஆயிரத்து 85 ரூபாய் வசூலிக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கேரள மாநில எல்லையின் 13 சோதனைச் சாவடிகளும், 12 மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வாளையார் மற்றும் எஸ்.பி. அப்பரல்ஸ் சோதனைச் சாவடிகளில் டிஎஸ்பி தலைமையில் ஏ, பி, சி என மூன்று ஷிப்டுகளின் அடிப்படையில் போலீஸாரால் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகன ஓட்டுநர்கள், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்கள், பயணிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
மேலும், இ-பாஸ் பெற்று வருபவர்களை சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்து, அவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சுற்றுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது, சுகாதாரத்துறை அலுவலர்களிடம் புகார் பெற்று சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மற்றும் அதன் அருகில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறையாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கரோனா பரிசோதனை செய்த பின்னரே அவர்களது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு விதித்த தடுப்பு நடவடிக்கைகள், விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT