Last Updated : 20 Jun, 2020 07:00 PM

 

Published : 20 Jun 2020 07:00 PM
Last Updated : 20 Jun 2020 07:00 PM

வழக்குகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்; திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை

திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஐ.டி.பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறார் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி

அதிமுக அரசு தொடுக்கும் வழக்குகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என திமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கினார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐ.டி விங்) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே வி.என்.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. இதில், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழகங்களின் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "அதிமுக அரசு, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆட்சியில் நிலவும் குறைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே, அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்கிறீர்கள். ஆனாலும் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எனவே திமுக ஐ.டி. பிரிவு மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மீது அதிமுக அரசு பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. அதைக் கண்டு நிர்வாகிகள் யாரும் அச்சப்பட, கவலைப்பட வேண்டாம்.

இந்த வழக்குகளை கட்சியின் சட்டப் பாதுகாப்புக்குழுவினர் பார்த்துக் கொள்வார்கள். தேர்தல் காலம் நெருங்கி வருவதால் ஐ.டி. பிரிவு இன்னும் அதிக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிரும்போது, அவை கண்ணியத்துடன் இருக்க வேண்டும். எதிர்த்தரப்பினர் தவறாகப் பதிவிட்டிருந்தாலும்கூட, நாம் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x