Published : 20 Jun 2020 04:17 PM
Last Updated : 20 Jun 2020 04:17 PM

மருத்துவப் படிப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு; மத்திய அரசு கதவு திறந்திருப்பது மிகப்பெரிய சமூக நீதி வெற்றி - கி.வீரமணி

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்கக் கூடாது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக.கி.வீரமணி இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரும் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 22 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில், பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் ஊடகங்களில் சில செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சலோனிகுமாரி மற்றும் சிலர் மருத்துவப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு கோரும் ரிட் மனுவை தாக்கல் செய்து அவை நிலுவையில் உள்ளன. வழக்கின் மறு விசாரணை வரும் ஜூலை 7 ஆம் தேதி என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோஸ்டர் முறையைப் பின்பற்றி, நடைமுறைப்படுத்த ஒரு திட்டம்

இதில் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் தரப்பட்ட பதில் மனுவில், அனைத்து அகில இந்திய தொகுப்பு இடங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு மாநிலங்கள் அளிக்கும் இட ஒதுக்கீட்டை, மொத்த இடஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டுக்கு மிகாமல், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லாமலும், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்த்து அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களை ஒவ்வொரு மாநிலம் மற்றும் கல்லூரி அளவிலான ரோஸ்டர் முறையைப் பின்பற்றி, நடைமுறைப்படுத்த ஒரு திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பதில் மனுவை ஆழமாக படித்துப் பார்த்தால், இப்போதைக்கு இதைச் செய்ய முடியாது, செய்யக்கூடாது என்பது போன்ற ஒரு முட்டுக்கட்டையையும் மறைமுகமாகப் போடுவதாகத் தெரிய வருகிறது.

குறுக்குசாலும் ஓட்டப்பட்டுள்ளது

ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று முடிவுற்ற நிலையில், அதில் இட ஒதுக்கீடு தருவது இயலாது என்றும், ஆகவே, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கில் தங்களை இணைத்து வழக்காடவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தக் கேட்கப்படுவது குறுக்குசால் ஓட்டிடும் வேலையே!

திராவிடர் கழகம் உட்பட அனைத்து வழக்காடு மனுதாரர்களும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள்படி, மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டின்படி, அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதைத்தான் வலியுறுத்தி சமூக நீதி கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

50% குறைவாகக் கொடுப்பது என்பது ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விதியை மீறிய செயல்!

தற்போது புதிதாக 27 சதவிகிதத்தை ஒப்புக் கொள்கிறோம் என்பதுபோல் சுகாதார அமைச்சகம், 50 விழுக்காட்டுக்கு மிகாமல் எனக் கூறுவது, அவர்கள் 2018 இல் நிறைவேற்றிய விதியை அவர்களே மீறுவதாகும். அந்தந்த மாநிலங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதில் மனுவிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒப்புக்கொள்ளும்போது, தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள 50 சதவிகிதத்தை எப்படி அவர்கள் பின்பற்றாமல், சட்ட ரீதியாக இவ்வழக்குகளில் நீதி வழங்க முடியும்?

எனவே, 27 சதவிகித அறிவிப்பு என்பது அகில இந்திய தொகுப்புகளில் இட ஒதுக்கீடு தத்துவம் முதன்முறையாக ஏற்றுக் கொண்டிருப்பது நாம் போராடும் சமூக நீதியின் முதற்கட்ட வெற்றியாகும். கொள்கையளவில் கதவு திறக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டப்படி அவர்களே விதித்துள்ள விதியை அவர்களே மீறுவது முறையல்ல. எனவே, இந்தப் பதிலையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எம்பிபிஎஸ் தேர்வுகள் இன்னும் முழுமையாக முடிந்துவிடவில்லை

மற்றொன்றும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்த ஆண்டிலேயே இவற்றைச் செயல்படுத்தாமல் இருப்பதற்கு சில விநோதமான, மறைமுகமான வாதங்கள் மத்திய சுகாதாரத் துறையால் வைக்கப்படுகின்றன. அதைப் பொறுத்தவரையில் இப்போது, எம்பிபிஎஸ் தேர்வுகள் இன்னும் முழுமையாக முடிந்துவிடவில்லை.

ஆகவே, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எந்த சிக்கலும் இந்தக் கல்வி ஆண்டில் வருவதற்கு வாய்ப்பில்லை.
மேற்பட்டப்படிப்பு இட ஒதுக்கீட்டில் கூடுதல் இடங்களை உருவாக்கி, உத்தரவு போடுவதுதான் அடுத்தகட்டப் பணியின் தேவை.
இது எப்படி சாத்தியமற்றது?

கரோனா போன்ற தொற்று நோய் ஏற்பட்டு இருக்கின்ற காலகட்டத்தில், நாட்டின் சுகாதார அடிக்கட்டுமானம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த கூடுதல் இடங்கள் நிச்சயமாக உதவுமே தவிர, எந்த வகையிலும் இடையூறாக இருக்காது.

விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமளிப்பது அவசியம்

ஆகவே, எந்தவிதமான சால்ஜாப்புகளையும் சொல்லாமல், இந்தக் கல்வியாண்டிலேயே மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடங்களை கூடுதல் அளவு உருவாக்கி, அதில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இடம் தருவது மிகவும் முக்கியமும், அவசியமுமாகும்.

இந்த இரண்டு விஷயங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் செய்வதுதான் சட்டப்படி சரியான தீர்வாக இருக்கும் என்பது சமூக நீதிக் கண்ணோட்டத்திலும் மிகவும் அவசியமாகும். இதுவே, திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.

வழக்கு நடத்தும் அனைத்துக் கட்சிகளும் திமுகவில் தொடங்கி அதிமுக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக ஆகியவை நம்முடைய பாராட்டுக்குரியன.

மற்றொரு முக்கியத் தகவல். மத்திய சுகாதாரத் துறை குறிப்பிட்டிருப்பதைப்போல, Unreserved Category என்ற ஒரு நிலை சட்டத்தில் எங்கும் கிடையாது. அது முக்கியமாகத் தெளிவுபடுத்தப்படவேண்டும்.

தட்டிய கதவு, முழுமையாகத் திறக்கப்பட வேண்டும்

இந்த தற்காலிக வெற்றி, தனிப்பட்ட கட்சிகளுக்குரிய வெற்றி என்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய சமூக நீதி வெற்றியாகும்! தட்டிய கதவு, ஓரளவுக்குத் திறக்கப்பட்டு இருக்கிறது. இது முறையாக, சட்ட ரீதியாக, முழுமையாகத் திறக்கப்பட வேண்டும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x