Published : 20 Jun 2020 02:30 PM
Last Updated : 20 Jun 2020 02:30 PM
கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காவிரி நீர் வந்தடைந்தது. எனினும், கோடை சாகுபடி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிகழாண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீரை தமிழக முதல்வர் பழனிசாமி ஜூன் 12-ம் தேதி திறந்து வைத்தார். பின்னர், கல்லணையில் இருந்து கிளை வாய்க்கால்களில் 17-ம் தேதி திறந்துவிடப்பட்டது.
அதில், கல்லணைக் கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இன்று (ஜூன் 20) தண்ணீர் வந்தது. இதையடுத்து, நெடுவாசல், வேம்பங்குடி, மேற்பனைக்காடு போன்ற இடங்களில் விவசாயிகள் மலர், நெல் மணிகளைத் தூவி வரவேற்றனர். வறண்டு கிடந்த கால்வாயில் காவிரி தண்ணீர் ஓடிவந்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசனதாரர்கள் கூட்டமைப்புத் தலைவர் அத்தாணி ராமசாமி கூறியதாவது:
"கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் காவிரி நீரை 168 ஏரிகளில் தேக்கிவைத்து சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பாசனம் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டில் காவிரி தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் ஓரளவுக்குத் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவாக அனைத்து ஏரி, கண்மாய்களையும் தண்ணீர் சென்றடைய வாய்ப்பு உள்ளது. இங்குள்ள 168 ஏரிகளிலும் தண்ணீரை முழுமையாகத் தேக்கி வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தத் தண்ணீரை வைத்து சாகுபடி செய்யப் போதுமானதாக இருக்காது.
எனினும், இந்தத் தண்ணீரோடு தென்மேற்குப் பருவமழையின் இறுதி மற்றும் வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தில் கிடைக்கும் மழைநீரையும் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுமே தவிர, தற்போது சாகுபடி செய்ய இயலாது.
எப்போது கல்லணைக் கால்வாயின் முழுக் கொள்ளளவான 4,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறதோ, அப்போதுதான் காவிரித் தண்ணீரை நம்பி முழுமையாக சாகுபடி செய்ய முடியும். அதுவரை சாத்தியம் இல்லை.
கல்லணைக் கால்வாயை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் மாவட்ட கடைமடைப் பகுதி விவசாயிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது".
இவ்வாறு அத்தாணி ராமசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT