Published : 20 Jun 2020 01:41 PM
Last Updated : 20 Jun 2020 01:41 PM
கரோனா பொதுமுடக்கத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பலரையும் தங்களது வழக்கமான பணியில் இருந்து மாற்றுத் தொழில்களை நோக்கியும் நகர்த்தியிருக்கிறது கரோனா. அப்படித்தான், குமரி மாவட்டம் கக்கன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஷ்யாம் சின்னத்துரை, டூவீலரில் சென்று மீன் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
கரோனா அடையாளம் காட்டிய புதிய தொழில் குறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய ஷ்யாம், “லாக்டவுனின் தொடக்கத்தில் இருந்தே அடியோடு பாதிக்கப்பட்ட விஷயங்களில் ஆட்டோ ஓட்டுநர் தொழிலும் அடக்கம். இப்போது நிபந்தனைகளோடு ஆட்டோக்களை ஓட்ட அரசு அனுமதித்துவிட்டாலும், மக்களுக்கு வெளியில் செல்லும் ஆர்வம் இல்லை. கரோனாவால் மக்களின் பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஆட்டோ பிடித்துச் செல்லும் மனநிலை வெகுவாகக் குறைந்திருக்கிறது. பெரும்பாலும் மருத்துவமனைகளுக்குச் செல்வதாக இருந்தால் மட்டுமே சவாரி கேட்டு அழைப்பு வருகிறது.
என்னைப் பொறுத்தவரை பள்ளிக்கூட சவாரிதான் ஆட்டோ ஓட்டுவதில் முக்கிய வருவாயாக இருந்தது. பள்ளிகள் திறக்காததால் அந்த சவாரியும் இல்லாமல் போய்விட்டது. அப்போதுதான் ஆட்டோவுக்கு மாற்றாக மோட்டார் சைக்கிளிலேயே போய் மீன் விற்கலாம் என முடிவெடுத்தேன். எனது ஊரில் என்னைப் போல் ஆட்டோ ஓட்டுபவர்களும், மற்ற சில நண்பர்களும் இதைச் செய்து கொண்டிருந்தார்கள்.
கன்னியாகுமரி பக்கத்தில் இருக்கும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்குப் போய் மீனை ஏலம் பிடித்து விற்கிறேன். சாயங்காலம் 7 மணிக்கு ஏலம் பிடிக்கப் போனால் ராத்திரி ஒருமணிக்கு ஊருக்கு வந்து சேர்வோம். காலை 6 மணிக்கு அந்த மீன்களை விற்கக் கிளம்பினால் சிலநேரம் 8 மணிக்கேகூட விற்று முடிந்துவிடும். அதிகபட்சம் 11 மணிக்குள் மீன்களை விற்று முடித்து விடலாம்.
இதனால் மதியத்துக்கு மேல் யாராவது சவாரிக்கு அழைத்தால் போகமுடியும். கரோனா அச்சத்தால் பக்கள் பயணத்தைத் தவிர்ப்பதால் இப்போதைக்கு ஆட்டோவில் வரும் வருமானம் மிக மிகக் குறைவு. இப்படியான சூழலில் கரோனா காலத்தில் குடும்பப் பொருளாதாரத்துக்கு மீன் விற்பனையே பெரிதும் கைகொடுக்கிறது.
இந்த வியாபாரத்தில் சில நாட்களில் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். சில நாள்களில் கைபிடித்தமும் வரும். ஆனாலும் இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் மீன் விற்பனைதான் என்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment