Published : 20 Jun 2020 01:10 PM
Last Updated : 20 Jun 2020 01:10 PM

கேரள எல்லையில் என்ன நடக்கிறது?- வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் விசாரணை

கோயம்புத்தூர்

தமிழக - கேரள எல்லையைக் கடந்து தொழில் செய்பவர்களிடம், கரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி, இரு மாநிலப் போலீஸாரும் கெடுபிடி காட்டுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும் ஒரு சிலர், பல்வேறு காரணங்களுக்காக இரு மாநிலப் போலீஸாரும் இவ்விஷயத்தில் ரொம்பவே தாராளமாக நடந்துகொள்வதாகவும் சொல்கிறார்கள்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலிருந்து தமிழகத்தின் கோவை மாவட்டத்திற்குப் பல வழித்தடங்கள் இருந்தாலும் என்.எச் 47 சாலையில் வாளையாறு வழியாக மட்டுமே, அதுவும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பாஸ் இருப்பவர்கள்கூட மற்ற எல்லைகளில் (நடுப்புணி, வேலந்தாவளம், ஆனைகட்டி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம்) அனுமதிக்கப்படுவதில்லை.

உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய கோவை மாவட்டம் வேலந்தாவளம் சோதனைச் சாவடிக்குச் சென்றிருந்தேன். கோவையிலிருந்து பாலக்காடு மாவட்டத்திற்குள் செல்வதற்கு வாளையாறுக்கு அடுத்தபடியாக உள்ள பிரதான சாலை இது. எல்லையைப் பிரிக்கும் பாலத்தைத் தாண்டி, ஏராளமான லாட்டரிச் சீட்டுக் கடைகள் திறந்திருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டியே தன் எல்லைக் கோட்டை நிர்ணயித்துச் சோதனையில் ஈடுபடுகிறது கேரள போலீஸ்.

இதுகுறித்து, ஒரு லாட்டரி சீட்டுக் கடைக்காரரிடம் விசாரித்தபோது, “இங்கே லாட்டரி சீட்டுகள் விற்பனையாவதே தமிழ்நாட்டு லாட்டரிப் பிரியர்களை நம்பித்தான். ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரம் வரை வியாபாரம் ஆகும். மொத்தம் 52 கடைகள் உள்ளன. பொதுமுடக்கத் தளர்வுக்குப் பிறகு கடைகளைத் திறந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. முதலில் பாலம் அருகில் நின்றுதான் சோதனை நடத்தி தமிழ்நாட்டுக்காரர்களை வர விடாமல் செய்தது கேரளப் போலீஸ்.

இங்கே இருக்கிற லாட்டரி சீட்டுக் கடைகளில் சுத்தமாக வியாபாரம் இல்லை என்றதும் சோதனைச் சாவடி எல்லையை அரை பர்லாங் தாண்டி வைத்திருக்கிறது. இருந்தாலும் இப்பவும் வியாபாரம் பெரிசா இல்லை. கேரளத்தவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்காரர்கள் கூட லாட்டரி வாங்க வரமாட்டேங்கிறாங்க. ஏனென்றால், அவர்கள் கையில் காசு இல்லை. இதனால், பல லாட்டரிக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன” என்றார்.

நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மொபட்டில் வந்த ஒருவர் கேரளச் சோதனைச் சாவடி போலீஸாரிடம் ஏதோ சொல்லி சமாளித்து தமிழ்நாட்டிற்குள் பிரவேசித்தார். அவரைத் தனியே ஓரங்கட்டிப் பேசினேன். பேசுவதற்கே ரொம்பவும் பயந்தார்.

ராமசாமி

“என் பெயர் ராமசாமி. சொந்த ஊர் திருநெல்வேலி. கொழிஞ்சாம்பாறை மண்ணூத்து கிராமத்துல (கேரளப் பகுதி) இருக்கேன். கோயமுத்தூர்ல இருந்து பிளாஸ்டிக் பொருட்கள மொத்தமா வாங்கி சில்லறை விலையில விற்கிறேன். வாரத்துல 4 நாள் கேரளாவுல விற்பேன். 2 நாள் தமிழ்நாட்டுக்குள்ளே விற்பேன். ஒரு நாளைக்கு ரூ.600 முதல் ரூ. 1,000 வரை கிடைக்கும். பொதுமுடக்கத்துல ஒரு மாசம் வீட்டை விட்டே வெளியே வரலை. அதுக்கப்புறம் சரக்கு கோயமுத்தூர்லயிருந்து எங்க வீட்டுக்கே வேன்ல வந்து எறங்கிடுது. நான் வழக்கமா எடுத்துட்டு சுத்த ஆரம்பிச்சேன். ஆனாலும் வியாபாரம் சூடு பிடிக்க மாட்டேங்குது” என்றவரிடம்,

“அதெல்லாம் சரி, கேரளத்திற்குள்ளிருந்து தமிழ்நாட்டுக்கு வர பாஸ் ஏதும் வச்சிருக்கீங்களா?” எனக் கேட்டேன். “ஏன் சார், கேட்கிறீங்க… அப்படி எதுவும் இல்லையே” என்று பயந்தபடியே சொன்னார். “அப்புறம் எப்படி கேரளப் போலீஸ்காரங்க விடறாங்க?” என்றபோது, “என்னைப் பத்தி இங்கே இருக்கிற போலீஸ்காரங்களுக்குத் தெரியும். தெரியாத போலீஸா இருந்தாலும் விஷயத்தைச் சொன்னா விட்டுருவாங்க. அதே மாதிரிதான் தமிழ்நாட்டுப் போலீஸும். ஏதோ வயித்துப் பாட்டுக்குப் போறவங்களை ஏன் தடுக்கணும்பாங்க. இதுவரைக்கும் என்னை யாரும் தடுக்கலை” என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து கேரளப் பகுதிக்குள் சென்ற சண்முகம் என்பவரை நிறுத்தி விசாரித்தேன். அவர் கையில் கேரளப் பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் அன்றாடம் வந்து செல்வதற்கு மூன்று மாதங்களுக்கான ரெகுலர் பாஸ் வைத்திருந்தார்.

“எனக்கு உழல்பதியில் (கேரளம்) கல்குவாரி வேலை. வீடு எட்டிமடையில் (தமிழ்நாடு) இருக்கு. மூணு மாசமா வேலைக்குப் போக முடியலை. பாஸ் இருந்தால்தான் விடுவோம்னு கேரள போலீஸ்காரங்க மறுத்துட்டாங்க. இப்ப ஒரு வாரம் முன்னாடிதான் இங்கிருந்து அங்கே போய் வேலை செய்யறவங்களுக்கு இப்படி கேரள அரசு ரெகுலர் பாஸ் கொடுத்தது. இணையத்துல அப்ளை பண்ணி வாங்கினேன். போகும்போதும், வரும்போதும் இந்தப் பாஸைக் காட்டணும்னு போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க” என்றார் சண்முகம்.

சண்முகம்

இங்குள்ள பாலத்திற்கு தெற்குப்புறம் கேரளம் இருக்கிறது. வடக்குப்புறம் தமிழ்நாடு. கேரள போலீஸாவது சோதனைச் சாவடியை பாலத்திற்கு அப்பால் அரை பர்லாங்கு தொலைவில்தான் அமைத்திருக்கிறது. ஆனால் தமிழக சோதனைச் சாவடி, இந்தப் பாலத்திற்கு வடபுறம் ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி வழுக்கல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. அங்கே மட்டும்தான் வருவோர் போவோரை நிறுத்தி விசாரிக்கிறார்கள் போலீஸார்.

இதன் மூலம் கேரளத்திலிருந்து தமிழகத்திற்குள் வந்து செல்வது யாருக்கும் சுலபமாகிவிடும். “இதனால் கரோனா தொற்று அங்கிருந்து இங்கே வரலாம் அல்லவா?” என்று அந்தச் சோதனைச் சாவடியில் உள்ள தமிழக போலீஸாரிடம் விசாரித்தேன்.

“இந்தப் பகுதியில் லாரி, டிரக் போன்ற கனரக வாகனங்களை அனுமதிப்பதில்லை. அதனால் பெரிய பிரச்சினை இருப்பதில்லை. தவிர பெரும்பாலும் இரு எல்லைகளிலும் அறிமுகமானவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் இங்கேயே சோதனையிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை” என்றனர் தமிழகப் போலீஸார்.

சில சமயம் கெடுபிடியாகவும், பல சமயங்களில் தாராளமாகவும் நடந்துகொள்ளும் போலீஸாரால், கரோனா பரவல் கட்டுக்குள் இருக்குமா என்பது முக்கியமான கேள்வி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x