Published : 19 Jun 2020 05:28 PM
Last Updated : 19 Jun 2020 05:28 PM
உலகையே அச்சுறுத்தும் கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நல்ல ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுப்பொருட்களே, தற்போது இந்தக் கொடிய நோய்க்கு முன்னெச்சரிக்கை மருந்தாகச் சொல்லப்படுகிறது. அதனால், இந்த ஊரடங்கு ஆரம்பித்த புதிதில் இருந்து கலப்படமில்லாத, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை வாங்கி, அதனைக் கேட்கும் நபர்களுக்கு வீடு தேடிச்சென்று கொடுக்கின்றனர் மதுரை ‘யாதும்’ அமைப்பு இளைஞர்கள்.
அவர்களில் கவனிக்கத்தக்கவர் மஞ்சப்பை என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் சுப்பிரமணியன். அவரிடம் பேசினோம்.
‘‘எங்க வீட்டு சமையல் அறைக்குத் தேவையான, கலப்படமில்லாத உணவுப்பொருட்களை வாங்க வேண்டும் என்பது என்னோட நீண்ட நாள் ஆசை. ஆனால், தனி ஆளாகப் பார்க்கும்போது சாத்தியப்படவில்லை. ஆனால், நிறையப் பேர் சேர்ந்து மொத்தமாக வாங்கும்போது கட்டாயம் சாத்தியம். இது கரோனா ஊரடங்கில் சாத்தியமானது. நானும் என்னோட நண்பர்களுடன் சேர்ந்து மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கையாக விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள், நம்பிக்கையான உற்பத்தியாளர்களிடம் இருந்து அரிசி, பருப்பு, பாசிப்பயிறு, தினை அரிசி, சாமை அரிசி, கேழ்வரகு, கம்பு மாவு, குதிரைவாலி அரிசி, சிறுதானியம், சிறுதானிய மாவு, நாட்டுச் சர்க்கரை, சீரகம், கடுகு, மிளகு போன்ற அன்றாடம் சமையலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுப்பொருட்களை வாங்குகிறோம்.
இதனை நானும், என் நண்பர்களும் பகிர்ந்து கொள்வதோடு தேவைப்படும் மற்றவர்களுக்கு வீடு தேடிச் சென்று கொடுக்கிறோம். எங்களோட இந்த முயற்சிக்கு பெயர் ‘யாதும்’. இந்த யாதும் அமைப்பில் சுமார் 50 குடும்பங்கள் வரை இதுவரை இணைந்துள்ளன.
அரிசியைப் பொறுத்தவரையில் மருந்து போடாமல் விளைவிக்கப்படுவதால் மார்க்கெட்டில் வாங்குவதை விட எங்களிடம் சற்று விலை கூடுதலாக இருக்கும். உதாரணமாக இட்லி அரிசி எங்களிடம் கிலோ 62 ரூபாயில் உள்ளது. ஆனால், மார்க்கெட்டில் ரூ.52, ரூ.54க்கு கிடைக்கும். சில பொருட்கள் விலை கூடும், குறையும். மலைப்பூண்டு கடைகளில் வாங்கினால் ரூ.280 என்பார்கள். அதுபோல், வெள்ளை நிற சைனா பூண்டு விலையே கிலோ ரூ.200 சொல்வார்கள். ஆனால், நாங்கள் மலைப் பூண்டு உற்பத்தி செய்யும் கொடைக்கானல் விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக வாங்கி விற்பதால் கிலோ ரூ.204 ரூபாய்க்குத்தான் விற்கிறோம். நல்ல உணவுப்பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்கிறவர்களிடம் இருந்து தொடர்ந்து தனி நபராக வாங்குவது எளிதானதல்ல.
மொத்தமாக வாங்கிக் குடும்பமாகப் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்த விற்பனையைத் தொடர்ந்து நடத்துவதற்காக குறிப்பிட்ட விலை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. வெளியே மார்க்கெட்டில் செக்கு எண்ணெய் 1 லிட்டர் ரூ.400 வரை விற்பார்கள். ஆனால், மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நேரடியாக அதைத் தயாரிப்போரிடம் இருந்து வாங்குவதால், ரூ.280க்கு வாங்குகிறோம். நாட்டுச் சர்க்கரையை கிலோ 70 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.
நம்மிடம் தொடர்ந்து வாங்குவோரை வைத்து இந்த மாதத்திற்கு எவ்வளவு தேவைப்படும் எனக் கணித்து வாங்கி வைத்துக் கொள்கிறோம். கேட்போருக்கு வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டுபோய் கொடுக்கிறோம். நாங்கள் கொண்டுசெல்லும் எண்ணெய், உணவுப்பொருட்களை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த மாட்டோம். முடிந்த அளவு பாத்திரங்கள், துணிப்பைகளில் கொண்டு போய்க் கொடுக்கிறோம்.
எங்கள் நோக்கம், நல்ல உணவுப்பொருட்களை கலப்படம் இல்லாமல் நேரடியாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பது. இரண்டாவது இடைத் தரகர்களைத் தவிர்த்து விவசாயிகளுக்கு நேரடியாகச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது. அதற்காக இயற்கை விவசாயிகளிடம் இருந்து மட்டுமே உணவுப்பொருட்களை வாங்குகிறோம்’’ என்றார் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT