Published : 19 Jun 2020 05:17 PM
Last Updated : 19 Jun 2020 05:17 PM

குடும்பங்களை, இளைஞர்களை நாசப்படுத்தும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்க: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை

2200 கோடி ரூபாய் புரளும், 5.5 கோடி மக்களை அடிமைப்படுத்தியுள்ள ஆன்லைன் ரம்மி என்னும் சூதாட்டம் குடும்பத் தலைவர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் நாசப்படுத்திவரும் நிலையில், அதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“நாட்டைப் பீடித்த கேடுகள், நோய்கள் பல எனினும் இணையத்தின் மூலம் ஒரு விபரீதம் கொடி கட்டிப் பறக்கிறது - அதுதான் ஆன்லைன் மூலம் ரம்மி என்னும் போதையூட்டும் கொடிய விளையாட்டு. இதில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், தற்கொலைக்குத் தூண்டப்பட்டவர்கள் நாளும் அதிகரித்து வருகின்றனர்,

அனுபவக் காயம்பட்ட திருச்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கூறுவது என்ன?

“ஒரு தடவை விளையாடிட்டீங்கன்னா.... அப்புறம் அது உங்களை உள்ள இழுத்துடும். ரம்மி ஒரு மிகப்பெரிய அடிக்‌ஷன். என் தம்பியின் நண்பன் விளையாடி கொண்டிருந்ததைப் பார்த்து திட்டின நானே ஒரு நாள் அதில் அப்படி என்னதான் இருக்கிறதென பார்ப்போமே என இணைந்தேன். ஒரு கட்டத்தில், முக்கிய வேலைகளை அனைத்தையுமே ஒதுக்கிவிட்டு விளையாடும் அளவுக்குப் போய்விட்டது.

என்னால் இதர பணிகள் குறித்து சிந்திக்கக் கூட முடியவில்லை நமது கணக்கில் பணம் போட்டவுடனே வரும் முதல் ஆட்டம், நல்லா ஜெயிப்பதுபோல் வரும். ஆர்வத்தில் தொடர்ந்து விளையாடினால் அவ்வளவுதான் எல்லாப் பணமும் போய்விடும்

இந்த விளையாட்டில் உங்களுடன் விளையாடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியாது. ‘ஏதாவது ஒரு ஆட்டத்தில், நீங்க நூறோ, இருநூறோ ஜெயிச்சீங்கன்னா தொடர்ந்து வர்ற பல ஆட்டங்கள்ல ஜெயிக்கவே முடியாது. இது மிகவும் தந்திரமாக கணினியால் புரோகிராம் செய்யப்பட்டு நம்மோடு விளையாடும் ஒரு மென்பொருள் ஏமாற்று வேலை ஆகும்‘ என்று கூறுகிறார் அனுபவப்பட்ட திருச்சி தோழர்.

இதில் சூட்சுமம் அல்லது சூழ்ச்சி என்னவென்றால், இந்தத் தளங்களை நிர்வகிப்பவர்களே சமூக வலைதளங்களில் போலிப் பெயர்களில் வந்து ரம்மி விளையாட சிறந்த தளம் இதுதான். இதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம், அதில் நிச்சயம் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ரீதியில் வாசகர்கள் எழுதியதுபோல எழுதிக் கொள்கிறார்கள்.

இந்த இணையதள விளையாட்டு என்பது சட்டத்தால் சரிவர கையாளப்படவில்லை. சட்டத்திலிருக்கும் ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இப்படியான விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக இதுபோன்ற விளையாட்டிற்குப் பின்னால் பெரும் மோசடிக் கும்பல் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இதை வெளியே யாரும் பேசுவது கிடையாது, எப்போதும் போல் இந்த மோசடிக் கும்பலுக்கும் அரசியல் மட்டத்திற்கும் நல்ல தொடர்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்கொலைக்கு ஆளாகும் நிலை...

பொழுதுபோக்குக்காக ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்தவர்கள் பலர், இப்போது தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ரம்மி விளையாட்டால் வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்களின் எண்ணிக்கையும், கடனில் சிக்கியவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

சாத்தான்குளம் அருகில் உள்ள பிரண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல், ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்த கதை மிகவும் துயரமானது. கடனிலிருந்து மீள முடியாமல் தன் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

வெற்றிவேல்-தோல்விவேல் ஆனது ஏன்?

வெற்றிவேலின் உறவினர்களிடம் பேசியபோது, ‘‘சென்னையில் இரும்புக்கடை நடத்திவந்த வெற்றிவேலுக்கு, நல்ல வருமானம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்னர் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் எளிதாக வெற்றி பெற்று பணம் கிடைத்திருக்கிறது. அதனால் சுலபமாகக் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்பட்ட அவர், தொடர்ந்து விளையாடினார்.

ஒருகட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, கடன் வாங்கியும் மனைவியின் நகைகளை விற்றும் விளையாடித் தோற்றுள்ளார். லட்சக்கணக்கில் இழப்பைச் சந்தித்து கடனாளி ஆனதால் சொந்த ஊருக்கே வந்துவிட்டார். இந்தப் பிரச்சினையால் வேதனைக்குள்ளாகி, தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததுடன் அவரும் தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் மூவரும் உயிர் தப்பினர். இதுமாதிரியான விளையாட்டை உடனடியாக தடைசெய்ய வேண்டாமா? ‘‘ஆன்லைன் விளையாட்டுகளால்’’ இளைய சமுதாயம் சீரழிந்துகொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த விளையாட்டுகளில் ஆர்வம்காட்டுவதால் படிப்பில் கவனம் குறைகிறது. பணம் வைத்து விளையாடக்கூடிய ஆன்லைன் ரம்மியால், பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன.

இந்த ரம்மி சூதாட்டப் போதைக்கு விளையாட்டாக இறங்கிய வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர், ஏடிஎம்மையே உடைத்துப் பணத்தை எடுக்கக்கூடிய அளவிற்குச் சென்று, அவர்களுடைய பணியும் பறிபோனது என்பது செய்திகள் மூலம் தெரியவருகின்றன.

ஒரு திரைப்படத்தில், கலைஞரின் வசனத்தில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ‘‘இது ஒரு கலையாகத்தான் ஆரம்பிக்கும்; ஆனால், கலை நிலையாக நிற்காது; அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டும்‘’ என்று சொல்வார். அதை நன்றாக மனதில் நிறுத்தவேண்டும். அது நூற்றுக்கு நூறு இதற்குப் பொருந்தும்.

ஐந்தரை கோடி பேர் சிக்கினர்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு வணிகத்தில் புழங்கும் பணத்தின் மதிப்பு ஆண்டுதோறும் 22 சதவிகிதம் அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் 5.5 கோடி பேர் விளையாடும் ஆன்லைன் ரம்மியை, ‘தி ரம்மி ஃபெடரேஷன்’ (டி.ஆர்.எஃப்) என்ற அமைப்புதான் முறைப்படுத்துகிறது.

நாடு முழுவதும் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் இந்தத் துறையில் 18 நிறுவனங்கள் ஈடுபட்டபோதிலும், 7 நிறுவனங்கள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியானா எனப் பல மாநிலங்களில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் மாநில அரசுகளால் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் காட்டிய பச்சைக்கொடி

ஒரு சில வழக்குகளில் உயர் நீதிமன்றம் இந்த விளையாட்டைத் தடைசெய்தபோதிலும், மேல்முறையீடுகளில் ஆன்லைன் நிறுவனங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது, வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி விளையாடப்படுவதல்ல.

சிந்திக்கும் வலிமை, எதிராளியைக் கணிக்கும் தன்மை உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் கிடைக்கும் வெற்றி என்பதால், இதை ஒரு சூதாட்டமாகக் கருத முடியாது’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதி வரை பல மேல்முறையீடுகள் செய்யப்பட்டபோதிலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு முழுமையாகத் தடைசெய்யப்படவில்லை.

திருவள்ளுவரின் எச்சரிக்கை

சூதுபற்றி திருவள்ளுவர் கூறும் எச்சரிக்கை மிகவும் முக்கியமானது.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர் (குறள் 940)

துன்பம் அடையுந்தோறும் உயிரின்மேல் ஆவலே உண்டாகும். அதுபோலவே, சூதாட்டத்தில் பொருள் இழப்பு ஏற்படுந்தோறும் அந்தச் சூதாட்டத்தை விடாது ஆடும் ஆவலே மிகும் என்ற குறளை - இப்பொழுது குடியைக் கெடுக்கும் இணைய தள ரம்மி சூதாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

‘கிரிக்கெட்’ என்ற விளையாட்டு - அதன் நிர்வாகம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் புரள்கிறது. இதில் விளையாட்டுக்காரர்களே சூதாட்டத்திற்குப் பலியாவது (மேட்ச் பிக்சிங்). இளைஞர்களை மூளைச் சலவை செய்வதில் சூதாட்டப் புகழ் கிரிக்கெட்டும் ஒன்றே. நாம் அஞ்சவேண்டியது எல்லாம் - உச்ச நீதிமன்றமே, ரம்மிகளுக்கு - குடும்பங்களை நாசப்படுத்தும் விபரீத விளையாட்டுகளுக்கு வியாக்கியானம் சொல்லிக் காப்பாற்றுவதுபற்றிதான்.

எந்த விலை கொடுத்தேனும் தடை செய்க!

எந்த விலை கொடுத்தேனும் இதனைத் தடை செய்வதுதான் மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு அடையாளம். அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இதனை வலியுறுத்த வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்''.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x