Published : 19 Jun 2020 04:28 PM
Last Updated : 19 Jun 2020 04:28 PM
கோவையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். குறிப்பாக, மேற்கண்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் இ-பாஸ் மூலம் அனுமதி பெற்று வந்துள்ளதாகவும், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ-பாஸ் இன்றி அனுமதியில்லாமல் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே இறுதி வரை கோவையில் 146 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதுவே நேற்றைய (ஜூன் 18) நிலவரப்படி கோவையில் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேற்று மட்டும் ஒரே நாளில் 23 பேர் பாதிக்கப்பட்டனர். 211 பேரில் 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் அதிகரிக்கும் எண்ணிக்கையில் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தோரும், அவர்கள் மூலம் இங்குள்ளவர்களுக்கு பரவி பாதிக்கப்பட்டோரும் அடங்குவர். குறிப்பாக, கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோவையில் கூடி வருகிறது.
சென்னையைப் போல் கோவையிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கோவையில் மாவட்ட நிர்வாகத்தினர், மாநகராட்சி நிர்வாகத்தினர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, முதல் நடவடிக்கையாக ஆர்.ஜி.புதூரில் ராமர் கோயில் வீதி, நல்லாம்பாளையத்தில் உள்ள விஜயா நகர், செல்வபுரத்தில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய மூன்று பகுதிகளை சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தவிர, ஏனைய தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளையும் தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இரண்டாவதாக, தனிநபர் இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்காத காரணத்தால் பூ மார்க்கெட் வளாகத்தை இன்று (ஜூன் 19) அதிகாலை மூடி சீல் வைத்தனர். அதைத் தொடர்ந்து, மாநகரில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை மீன் மார்க்கெட் வளாகம், மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி மார்க்கெட்டுகள், ஆர்.ஜி வீதியில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடைகளுக்குத் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர், மேற்கண்ட இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் கூறும்போது,‘‘ கோவையில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் மேற்கண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் உள்ளதா எனவும், காய்ச்சல் இருந்தால் கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் போன்றவையும் வழங்கப்படுகிறது. மாநகரில் தற்போதைய நிலவரப்படி வெளிப்பகுதிகளில் இருந்து வந்த 2,900-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இ-பாஸ் அனுமதியில்லாமல் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தெரிந்தால் பொதுமக்களும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT