Published : 19 Jun 2020 03:27 PM
Last Updated : 19 Jun 2020 03:27 PM
தமிழக ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சிகளும் இணைந்து நின்று கரோனாவை ஒழிக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று திருவடிக்குடில் சாமிகள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைத்துத் தரப்பிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனாவால் உயிரிழந்துவிட்ட நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனியும், உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகனும் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததே கரோனா வேகமாகப் பரவ காரணம் என்று முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால், அரசின் தவறான முடிவுகள்தான் தொற்று அதிகரிக்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் வார்த்தைகளால் அடித்துக்கொள்ளாமல் ஒன்றிணைந்து நின்று மக்களைச் சந்தித்து நோயை விரட்ட வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பெருந்தொற்றான கரோனாவை விரட்டுவதற்கு ஆளுங்கட்சியும் வேகமான செயல்பாடுகளை முடுக்கிவிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதில் தெரியும் குறைபாடுகளை எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இவையெல்லாம் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடவில்லை.
தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தும் மக்கள் அதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் விடுத்தாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனவேதான் தமிழகத்தை அச்சுறுத்தும் இந்தப் பேராபத்தை எதிர்கொள்ள இரண்டு தரப்பும் இப்போது இணைந்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் உடனடியாக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அழைத்துப் பேச வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும், தலைவர்களும் ஒன்றாக நின்று பொதுமக்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்க வேண்டும். அரசியலைக் கடந்து தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது நமக்காகத்தான் என்று உணரும் மக்கள் நிச்சயம் அதற்கு மதிப்பளிப்பார்கள்.
தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தங்கள் வீடுகளுக்குள் இருப்பார்கள். வெளியே வருகிறபோது தவறாமல் முகக்கவசம் அணிவார்கள். பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பார்கள். இந்த மூன்றையும் அவர்கள் பின்பற்றினால்தான் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
அதனால் ஆளுங்கட்சி கவுரவம் பார்க்காமல் உடனடியாக எதிர்க்கட்சிகளை அழைக்க வேண்டும் எதிர்க்கட்சிகளும் இதில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு தமிழக அரசோடு இணைந்து பொதுமக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இதற்காகக்கூட இணையவில்லை என்றால் வேறு எதற்காக இணையப் போகிறார்கள்?’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT