Published : 18 Jun 2020 09:55 PM
Last Updated : 18 Jun 2020 09:55 PM

ஊர் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றும் அரசாணை வாபஸ் : அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் பற்றிய அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் 2/3 நாளில் புதிய அரசாணை வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி - 2018--2019--ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செய்லபடுத்துதல் குறித்த கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.

ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தலைவராகக் கொண்ட உயர்நிலைக்குழுவும் மற்றும் துறை அமைச்சரை தலைவராக கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

முதல் கட்டமாக, தமிழ், ஆங்கில உச்சரிப்புகளில் முற்றிலுமாக வேறுபாடுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது ஆலோசனைக்குழு கூட்டத்தின் முடிவிற்கிணங்க மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பெற்ற ஊர்ப்பெயர்களும், தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் மாற்றம் செய்யப்பெற வேண்டிய ஊர்ப்பெயர்களும் உள்ளடக்கிய 1018 ஊர் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதில் பல ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே இல்லாமல் புதிய வடிவில் இருந்தது விமர்சிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் கேலி சித்திரங்கள் வெளியானது. வேலூர் என்பதை ஆங்கிலத்தில் வீலூர் எனவும், விழுப்புரம் என்பது வில்லுப்புரம் எனவும் எழுதப்பட்டிருந்தது. இது விமர்சனத்துக்குள்ளாகி வந்த நிலையில் இன்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அரசாணையை திரும்ப பெறுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பல ஊர் பெயர்கள் தவறுதலாக உச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளதால் அரசாணையை திரும்பப்பெற்று வேறு சில மாற்றங்களுடன் 2/3 நாட்களில் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x