Published : 18 Jun 2020 06:56 PM
Last Updated : 18 Jun 2020 06:56 PM

கரோனா நோய் தடுப்புப் பணி ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு; விசாரணை நடத்துக: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை

கரோனா நோய்த்தொற்று நேரத்திலும் ஒப்பந்தப் பணியாளர் நியமனத்தில் தரகுத் தொகை பெற்றது வெட்கப்படவேண்டிய ஒன்று. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வெளிப்படையாக நியமனம் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ‘முகவர்கள்‘ மூலம் ஒப்பந்தச் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளது. இப்படி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களிடம் ‘ஒரு மாத ஊதியம்‘ தரகுத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.

சமூகத்தில் முன்மாதிரி வேலையளிப்போராக இருக்க வேண்டிய அரசு, இப்படி தவறான செயல்களுக்கு முன்மாதிரி ஆகியிருப்பது வெட்கப்படத்தக்கது. ‘உயிர்க்கொல்லி’ நோய் பெருந்தொற்றுத் தடுப்புப் பணிகளில் பணியாற்ற வருபவர்களை அரசு, நேரடியாக நியமனம் செய்து சிறப்பு ஊதியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டியதைத் தவிர்த்துவிட்டு, எதற்காக ‘தரகர்கள்’ மூலம் நியமனம் செய்தது என்பதைப் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

பல்வேறு துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பது வெளிப்படையானது. ஆனால் நாடு முழுவதும் கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவலில் உறைந்து கிடக்கும் நிலையில், நோய் பெருந்தொற்று சிகிச்சை பணியிலும் பணம் தின்னிக் கழுகுகளாக செயல்படும் தரகர்களை அணுகியிருப்பது ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்து தவறுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், இதுவரை கரோனா நோய் பெருந்தொற்றுப் பணிக்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், பணியாளர்கள் அனைவரையும் அரசின் நேரடி நியமனம் பெற்றவர்கள் என சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x