Published : 18 Jun 2020 06:41 PM
Last Updated : 18 Jun 2020 06:41 PM
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள் மீது மண்டலம் விட்டு மண்டலத்தில் தீர்வுகாணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா ஊரடங்கு காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 135 மண்டல அலுவலகங்களின் செயல்பாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக மும்பை, தானே, ஹரியாணா மற்றும் சென்னை மண்டல அலுவலகங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த அலுவலகங்கள் குறைந்தளவு பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.
இருப்பினும் கரோனா ஊரடங்கு தொடர்வதால் வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்கள் முன்பணத் தொகை கேட்டு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் குறைந்தளவு பணியாளர்களுடன் இயங்கி வரும் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் தேங்கி வருகின்றன.
இதையடுத்து இந்த விண்ணப்பங்களை நாடு தழுவிய அளவில் பரிசீலித்து, குறைந்தளவு ஊழியர்களுடன் இயங்கும் அலுவலகங்களின் பணிச்சுமையை குறைக்கவும், அனைத்து மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை பயன்படுத்தி சந்தாதாரர்களின் விண்ணப்பங்களுக்கு விரைந்து தீர்வுகாணவும், எந்தப்பகுதியையும் சேர்ந்த சந்தாதாரர்களாக இருந்தாலும் எந்தவொரு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலிருந்தும் நடவடிக்கை எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் என்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், வருங்கால வைப்பு நிதி மண்டலத்தை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களை எந்த மண்டலங்களில் இருந்தும் செயல்படுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியில் வைப்புநிதி, ஓய்வூதியம், பகுதி தொகையை திரும்பப்பெறுதல், பணத்தை முழுமையாக திரும்பப்பெறுதல் மற்றும் கணக்கு மாற்றம் தொடர்பான இணையவழி விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்படும்.
கரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 1 முதல் 80,000 விண்ணப்பங்களுக்கு மேலாக தீர்வு காணப்பட்டு சந்தாதாரர்களுக்கு ரூ.270 கோடி அளவிற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தவொரு அலுவலகத்திலிருந்தும் விண்ணப்பத்திற்கு தீர்வு காணும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் சந்தாதாரர்கள் அதிக பலன்பெறுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT