Published : 18 Jun 2020 06:44 PM
Last Updated : 18 Jun 2020 06:44 PM
கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த மே மாதத்தில் மட்டும் 930 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. கரோனா தாக்கத்துக்கு மத்தியிலும் அரசு மருத்துவனையின் இந்தச் சேவை பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின. கரோனா அச்சம் காரணமாக புறநகரில் இருந்த பல சிறிய மருத்துவமனைகள் கர்ப்பிணிகளை அனுமதிக்க மறுத்தன. சில தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதனால், அங்கு ஆலோசனை பெற்று வந்த கர்ப்பிணிகள் பலர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும் என்று கருதி அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிகளும் அடங்குவர்.
இதனால், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 670 பிரசவங்கள், ஏப்ரல் மாதம் 815 பிரசவங்கள், மே மாதம் 930 பிரசவங்கள் நிகழ்ந்தன. ஒரே ஒரு மாதத்தில் 930 பிரசவங்கள் நிகழ்ந்தது மருத்துவமனை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறும்போது, "திடீரென எண்ணிக்கை அதிகமானதால் மற்ற துறைகளில் கூடுதலாக இருப்பில் இருந்த படுக்கைகளைப் பெற்று வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். இதில், கடந்த மே 30-ம் தேதி போத்தனூரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. அந்த 3 குழந்தைகளும், தாயும் நலமாக வீடு திரும்பியுள்ளனர்.
இக்கட்டான சூழலில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, சேவை செய்து வரும் கோவை அரசு மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருத்துவத்துறை தலைவர், பேராசிரியர் மனோன்மணி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள்தான் இதற்குக் காரணம்" என்றார்.
பிளாட்டினம் சான்று
பிரசவ வார்டின் தரத்தை சிறப்பாகப் பேணிவரும் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 'லல்ஷயா' சான்று வழங்குகிறது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனைக்கு 'பிளாட்டினம்' சான்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT