Published : 18 Jun 2020 06:28 PM
Last Updated : 18 Jun 2020 06:28 PM
மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீட்டிக்கவில்லை. உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நீட்டிப்பு குறித்து திங்கட்கிழமை தெரிவிப்பதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி, வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “கஜா புயல் போன்ற முந்தையகால தேசிய பேரிடர்களின்போது நுகர்வோர்களின் கஷ்டங்களை அறிந்து மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டது.
அதேபோல கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்யத் தடை விதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர, பிற அனைத்து மாவட்டங்களுக்கும் ஜூன் 15-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக திங்கள்கிழமை (22-ம் தேதி) பதிலளிப்பதாகக் கூறினார்.
இதையடுத்து, வழக்கை ஜூன் 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT