Published : 18 Jun 2020 05:11 PM
Last Updated : 18 Jun 2020 05:11 PM
திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்களில் ஒருவருக்குக் கூட, கரோனா நிவாரண நிதி கிடைக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர், பெருமாநல்லூர், அவிநாசி மற்றும் காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் நுங்கு, பனங்கிழங்கு, பனை ஓலை மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்களைப் பனைத் தொழிலாளர்கள் சேகரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். அதேபோல் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர், மாவட்டங்களில் உள்ள ஆரம்ப கருப்பட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். திருப்பூரில் 23 சங்கங்கள், கோவையில் 15 மற்றும் ஈரோட்டில் 45 என மொத்தம் 83 ஆரம்ப கருப்பட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
இந்தக் கூட்டுறவு சங்கங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 96 பேர், ஈரோட்டில் 685 பேர் மற்றும் கோவையில் 122 பேர் என மொத்தம் 903 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவருக்குக் கூட நலவாரியம் மூலம் கிடைக்கப்பெறும் கரோனா நிவாரண நிதி கிடைக்கவில்லை என்கின்றனர்.
இதுகுறித்து குன்னத்தூர் பகுதி பனைத்தொழிலாளர்கள் கூறும்போது, "பனையின் முக்கிய உற்பத்திப் பொருள் கருப்பட்டி. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் கருப்பட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில், உற்பத்திக் குறைவு காரணமாக தற்போது பனங்கருப்பட்டி கிலோ ரூ.188-க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், அருகில் உள்ள ஈரோடு, கோவை மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி, குன்னத்தூரில் அமைந்துள்ள கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் மூலம், தொழிலாளர்களிடம் பெறப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்தைப் பயன்படுத்தும் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அதேபோல் பதிவு செய்த தொழிலாளர்களும், தங்களது பதிவைப் புதுப்பிக்காமல் விட்டதால், தற்போது தமிழக அரசு கரோனா நிவாரண நிதியாக அறிவித்த ரூ.1,000 ஒருவருக்குக் கூட கிடைக்கவில்லை" என்றனர்.
பனைத் தொழிலாளி குன்னத்தூர் ராமசாமி கூறும்போது, "கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகப் பதிவு செய்வது, அதனைப் புதுப்பிப்பது தொடர்பாக, மரம் ஏறும் தொழிலாளர்களிடம் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. இதுவே கரோனா நிவாரண நிதி கிடைக்காமல் போக முக்கியக் காரணம். பனை ஏறும் தொழிலாளர்கள் குறைந்து வரும் சூழலில், நலவாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பனை ஏறும் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு கரோனா கால நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்றார்.
குன்னத்தூர் ஆரம்ப கருப்பட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் முருகானந்தம் கூறுகையில், "ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 903 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பதிவைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு நலவாரியம் மூலம் கிடைக்க வேண்டிய கரோனா கால நிவாரண நிதி யாருக்கும் கிடைக்கவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT