Published : 18 Jun 2020 04:30 PM
Last Updated : 18 Jun 2020 04:30 PM

ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு தமிழகம் முழுவதும் மவுன அஞ்சலி: போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை

கரோனா பாதுகாப்புப் பணியின்போது தொற்று பாதித்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு தமிழகம் முழுவதும் காவலர்கள் இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் முன்கள வீரராகப் பணியாற்றியவர் மாம்பலம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பாலமுரளி. இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் முதல் களப்பலியாக அமைந்த அவரது மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இன்று காலை மாம்பலம் காவல் நிலையத்தில் அவரது உருவப்படத்துக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உளவுத்துறை தலைவர் ஈஸ்வர மூர்த்தி, சென்னை கூடுதல் ஆணையர்கள், இணை, துணை ஆணையர்கள் காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் இன்று மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர மவுன அஞ்சலி செலுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ''கரோனா பாதுகாப்புப் பணியின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஆய்வாளர் பாலமுரளியின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (18.06.2020) மாலை 5 மணிக்கு தமிழக காவல்துறையினர் அனைவரும் இரண்டு நிமிடங்களுக்கு அவரவர் பணிபுரியும் இடத்திலேயே மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x