Published : 18 Jun 2020 04:18 PM
Last Updated : 18 Jun 2020 04:18 PM
இ-பாஸ் இல்லாமல் தென் மாவட்டங்களுக்கு வருவோர் சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்பப்படுவதால் குழந்தைகள், முதியவர்களுடன் சாலைகளில் தவிக்கும் சூழல் நிலவுகிறது. மேலும், சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகாரிகள் காலில் விழும் பரிதாபமும் நடக்கிறது.
தென் மாவட்டங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் வருவோரை மதுரை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அதிகாரிகள் திருப்பி அனுப்புவதால் சென்னையில் இருந்து வாகனங்களில் குழந்தைகள், முதியவர்களுடன் வருவோர் சாலையில் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல சோதனைச்சாவடி அதிகாரிகள் காலில் விழுவதும், அழுது கெஞ்சுவதும் பார்க்க பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திலே ‘கரோனா’ தொற்று சென்னையில் மிக அதிகமாக உள்ளது. இந்த நோய் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவுவதால் மூட்டை முடிச்சிகளோடு சென்னையில் இருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் மிக அதிகமாக உள்ளனர். பஸ், ரயில் சேவை இல்லாவிட்டாலும் மக்கள் சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் வரை தற்போது போல் சோதனைச்சாவடிகள் பெரியளவில் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்படவில்லை. அதனால், அவர்களில் பலர் இ-பாஸ் பெறாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் அவர்களை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து தனிமைப்படுத்த முடியவில்லை. பரிசோதனை செய்யவில்லை.
அதனால், அவர்கள் மூலம் இந்த தொற்று நோய் தென் மாவட்டங்களில் மீண்டும் பரவியது. மதுரையில் கடந்த 10 நாட்களாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோர் இ-பாஸ்க்கு விண்ணப்பித்தாலும் கிடைப்பதில்லை.
அதனால், அவர்கள் போலி இ-பாஸ் அல்லது இ-பாஸ் பெறாமல் பல்வேறு வழிகளில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வண்ணம் உள்ளனர். இதை தடுக்க தற்போது மதுரை மாவட்ட எல்லையான மேலூர் பிரான்மலை சென்னை-மதுரை நான்குவழிச்சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைச்சாவடியில் மேலூர் தாசில்தார் சிவகாமிநாதன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், போலீஸார் பணிபுரிகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வந்தால் ஒன்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் விருப்பப்பட்டால் ஒரிரு நாள் அரசு கூறும் இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்தப்பிறகு தொற்று இல்லாவிட்டால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இருந்தால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டும் ஒரு மணி நேரத்திற்கு இந்த சோதனைச்சாவடி வழியாக 60 முதல் 100 வாகனங்களில் மக்கள், தென் மாவட்டங்களை நோக்கி படையெடுகின்றனர். அவர்களில் பலர் இ-பாஸ் பெறாமல் வந்து, சோதனைச்சாவடி அதிகாரிகள், போலீஸாரிடம் சொந்த ஊர்களுக்கு செல்ல கெஞ்சுவது பரிதாபமாக உள்ளது.
சிலர் குழந்தைகளுடனும், முதியவர்களுடன் வந்து நின்று இ-பாஸ் இல்லாமல் சோதனைச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் மனமுடைந்து நிற்கின்றனர். அவர்களில் மருத்துவ அவசரசிகிச்சை என்றால் அதிகாரிகளே மனமிறங்கி பரிசோதனைக்கு அனுப்பாமலே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர், சோதனைச்சாவடியை கடந்து செல்ல கைக்குழந்தைகளை காட்டியும், அதிகாரிகள் காலில் விழுந்தும் கதறுவது சொந்த் நாட்டிலே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுவது பார்ப்போரை கண்ணீர் வரவழைக்க வைக்கிறது.
ஆனாலும், அதிகாரிகள், கறாராக தயாராக இருக்கும் கார், பஸ்களில் இ-பாஸ் இல்லாமல் வருவோரை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருவது தவறுதான் என்றாலும் அதற்கு என்ன நடைமுறைகளோ அதை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.
அதைவிட்டு சோதனைச்சாவடியில் பணிபுரியும் தாசில்தார் முதல் போலீஸார் வரை, சென்னையில் இருந்து வந்தாலே அவர்கள் நோய் தொற்றுடன்தான் வருவதுபோல் ‘‘உங்களால்தான் மற்ற ஊர்களில் கரோனா பரவுகிறது, ஏன் இ-பாஸ் இல்லாமல் வந்து எங்க உயிரை வாங்குறீங்க” என்று மனம் புண்படும்படி பேசுகின்றனர். இந்த ஏச்சும் பேச்சும், புறக்கணிப்பும் மாவட்ட எல்லையில் தொடங்குவதால் சொந்த ஊர் வரை தொடர்வதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர் நொந்துபோய் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT