Published : 18 Jun 2020 12:59 PM
Last Updated : 18 Jun 2020 12:59 PM
இன்று நள்ளிரவு முதல் 4 மாவட்டங்களில் அமலாகும் ஊரடங்கின்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே மே 31-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ஜூன் 30-ம் தேதி வரை 12 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன.
அம்மா உணவகங்கள் அல்லாமல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டகளில் உள்ள சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு முதியோர், நோயுற்றவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
“தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31.5.2020 வரை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இந்த நடைமுறை நாளை (19.6.2020) முதல் 30.6.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்”.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT