Published : 18 Jun 2020 12:18 PM
Last Updated : 18 Jun 2020 12:18 PM
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் நிறைந்த பள்ளி மற்றும் நிறுவனங்களை மக்களைத் தனிமைப்படுத்தும் பகுதிகளாகப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் கூட்டாக அரசுக்கு எழுதியுள்ள கடிதம்:
“கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதிம் 1 சதவிகிதமாகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகவும் உள்ளது.
மக்கள் நெருக்கம் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புயல் போன்ற பாதிப்பின்போது மக்களைப் பாதுகாக்க பள்ளி மற்றும் சமுதாயக் கூடங்களை அரசு தற்காலிகமாகப் பயன்படுத்தியது.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ள மக்களை குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் அதிக இடவசதி கொண்ட பள்ளி மற்றும் மாற்று இடங்களுக்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு மாற்றுவதால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.
அதிக இடவசதி கொண்ட அரசுப் பள்ளிகள் மற்றும் மையங்களில் உள்ள விளையாட்டுத் திடலில் சுகாதாரமான முறையில் தங்க வைக்கலாம். அம்மா உணவகத்தின் மூலம் உணவு மற்றும் குடிநீரை வழங்குவதால் அரசின் சமூக விலகலை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியும். பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.
கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்தலாம். பள்ளிகளில் தனிமை வார்டுகளை அமைப்பதன் மூலம் ஏராளமானோர் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்க முடியும். இதனால், அரசு நிறுவனங்கள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும்".
இவ்வாறு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT