Published : 21 Sep 2015 02:55 PM
Last Updated : 21 Sep 2015 02:55 PM

ஒழுகும் வீடுகளை புதுப்பித்து தருவார்களா?- கல்கொத்தி மலைக் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வீதிக்கு கான்கிரீட் பாதை போட்டுத்தரும் அதிகாரிகள், பல ஆண்டுகளாக ஒழுகும் வீடுகளை சரி செய்து தர வேண்டும் என்று கல்கொத்தி மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் சாடிவயலுக்கு மேலே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, செந்நாய்க் கூட்டங்களுக்கு மத்தியில் அமைந் துள்ளது கல்கொத்தி கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த மலை மக்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பு, கல்வி வசதிகள் ஏற்படுத்தி தருவதாக சொல்லி அங்கிருந்து கிழக்கே 3 மைல் தொலைவில் நண்டங்கரை பள்ளம் அருகே குடியமர்த்தினர் அதிகாரிகள்.

இங்கே குடிபெயர்ந்த மலைமக்களுக்கு 27 தொகுப்பு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. சிறுவாணி சாலையிலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள இப்பகுதியும் கல்கொத்தி என்றே அழைக்கப்பட்டது. இங்கே 27 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் 30-க்கும் அதிகமான குடும்பத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். சிறுவாணி சாலையிலிருந்து கல்கொத்திக்கு 1 கிமீ தூரமும் சாலை வசதியில்லை. அதற்காக போராடியதால், பஞ்சாயத்து மூலம் சாலை போடப்பட்டு வருகிறது. தெருக்களுக்கு கான்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒழுகும் வீடுகளையும் அதிகாரிகள் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து இங்கு வசிக்கும் மலை மக்கள் கூறியதாவது: நீங்க எல்லாம் மலையை விட்டு கீழே வந்தால்தான் உங்களுக்கான வசதி கள் எல்லாம் செஞ்சு தரமுடியும்ன்னு அதிகாரிக சொன்னதுலதான் நாங்க பூர்வீக இடத்தை விட்டுட்டு இங்கே குடிவந்தோம். கட்டிக் கொடுத்த வீடுகள் ஒண்ணு ரெண்டு வருஷம் கூட தாங்கலை. ஆங்காங்கே இடிஞ்சு மழையில ஒழுக ஆரம்பிச்சுடுச்சு. வீட்டுக்குள்ளே தரை பூரா மண்ணும், ஜல்லியும் எழும்பிப்போச்சு. வீட்டுத்திண்ணைகளை பாருங்க, வீடு தனியா திண்ணை தனியா பிளந்து நிக்குது. எங்க ஊருக்கு ரோட்டைக் கூட, இவ்வளவு நாள் கழிச்சுத்தான் போராடி பெற வேண்டியிருக்கு. தொழில் அமைச்சுத்தர்றேன்னு சொன்னாங்க. பெரிசா எந்த தொழிலும் இல்லை.

மிருகங்களால் பயம்

தோட்டத்துல வேலை கிடைச்சா தினக்கூலி ரூ.150 லிருந்து ரூ.200 வரை கொடுப்பாங்க. வருஷத்துல பாதி நாள் வேலை இருக்காது. அப்ப எல்லாம் காட்டுக்குள்ளே விறகு பொறுக்கப் போவோம். அது ஒரு தலைச்சுமைக்கு ரூ.50 கிடைக்கும். இதுதான் எங்க ஜீவனமா இருக்கு. ராத்திரியானா இங்கேயும் யானை உட்பட மிருகங் கள் பயம் இருக்கு. இது வரைக்கும் அதுகளால எந்த ஆபத்தும் வரலை. ஆனா இந்த வீடுக எப்போ இடிஞ்சு விழுந்துடுமோன்னு பயமா இருக்கு.

இப்படிப்பட்ட வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுக்கிறேன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மூலைக்கு மூலை குழி தோண்டி கான்கிரீட் வளையங்கள் வச்சாங்க. அதுவும் அப்படியே பாதியில் கிடக்கு. சிறுவாணி தண்ணிக்கு எழுதிக் கொடுத்து வருஷக்கணக்குல ஆச்சு. அதுவும் வரலை. எங்களுக்கு எது நடக்குதோ இல்லியோ இந்த வீடுகளை புதுப்பிச்சு ஒழுகறதா நிறுத்தினா போதும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வனத்துறை சொல்வதென்ன?

இப்பகுதி வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது: குடியிருப்புகள் ஒழுகுவதை சரி செய்ய, அவ்வப்போது பொங்கலுக்கு, வீட்டுக்கு இவ்வளவு சிமென்ட்டுன்னு கொடுக்கிறோம். தவிர வெள்ளையடிக்க பெயின்ட் தர்றோம். அதுல புதுப்பிச்சுத்தான் வீடுகள்ல வசிக்கிறார்கள். வர்ற பொங்கலுக்கும் சிமென்ட், பெயின்ட் கிடைக்கும். புதுவீடுகள், வீடுகள் புதுப்பிப்பு எல்லாம் ஊராட்சி மூலம் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x