Published : 18 Jun 2020 10:12 AM
Last Updated : 18 Jun 2020 10:12 AM
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளுக்கான தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்று வரும் குளறுபடிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையில் கரோனாவின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. அதன்பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ, திடீரென 'ஜென்டில்மேன் ஹெச்.ஆர்' (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் மருத்துவப் பணியாளர் நியமனத்திற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
அரசு நியமித்த அந்த நிறுவனமோ, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி தமது பெயரைப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்தது. அதாவது, விளம்பர அறிவிப்பு, பணி நியமனத்திற்கான ஆணை, நிறுவனத்தைப் பற்றிய தகவல் குறிப்பேடு என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாகப் பெயரை அந்த தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இதைவிட அதிர்ச்சியாக தமிழக அரசுக்காக மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு விளம்பரம் கொடுப்பதற்கு முதல் நாள்தான் (ஜூன் 13) அந்த நிறுவனத்திற்கு இணையதள முகவரியே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வருகிறது.
அதாவது, அரசோடு ஒப்பந்தம் போட்டபிறகே அவசர, அவசரமாக இணையதளத்தைப் பதிவு செய்து ஆளெடுப்பதற்கு அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணியை, முன் பின் தெரியாத ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான முடிவை எடுத்தது யார்? இப்படியொரு நெருக்கடியான நேரத்தில் அனுபவம் இல்லாத நிறுவனம் தகுதியில்லாதவர்களை மருத்துவப் பணிக்கு நியமித்திருந்தால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?
தற்போது புகார் எழுந்த பிறகு அந்தத் தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் செய்தி வெளியானாலும், மக்களின் உயிர் காக்கும் பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் போகிற போக்கில் இப்படி ஒரு தவறு நிகழ்ந்தது எப்படி? இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
தகுதியற்ற நிறுவனத்தின் வழியாக கூடுதல் விலை கொடுத்து கரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட் வாங்குவதில் ஆரம்பித்து, தற்போது மருத்துவப் பணியாளர் நியமனம் வரை கொஞ்சமும் மனசாட்சியின்றி ஆட்சியாளர்கள் புகுந்து விளையாடுவதாக மக்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்?
இவர்கள் வழக்கம்போல எதுவும் சொல்ல மாட்டார்கள் என்பதால் மக்களின் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதுபற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலமாவது தற்காலிக மருத்துவப் பணியாளர் நியமனம் முறையாக நடைபெற வழி கிடைத்திட வேண்டும்".
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT