Published : 18 Jun 2020 07:23 AM
Last Updated : 18 Jun 2020 07:23 AM
தமிழகத்தில் கரோனா தடுப்புக் கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடியும், சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். இரண்டாம் நாளான நேற்று தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கரோனா தடுப்புக்காக ஜூன் 19 முதல் 30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் கரோனா நோயாளி களை கையாள்வதற்காக 53 கரோனா மையங்கள் அமைக் கப்பட்டு, அவற்றில் 17,500 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத் தப்பட்டுள்ளன. கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தல் கள்படி 3 லட்சத்து 85 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 261 ரயில்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள் ளனர். இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க நான் ஏற்கெனவே கோரியிருந்த ரூ.3 ஆயிரம் கோடி நிதியையும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 2-ம் கட்ட நிதியையும் உடனே வழங்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்.
மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதுடன், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கு நிதி ஆணையத்தின் பரிந்துரையில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடி இடைக்கால நிதி ஒதுக்க வேண்டும். நெல் கொள்முதலுக்கான மத்திய அரசின் மானியம் ரூ.1,321 கோடியை ஒதுக்க வேண்டும்.
மின் உற்பத்தி பிரிவின் உடனடி நிதிப்பளுவை குறைக்க நிவாரண தொகுப்பு அறிவிக்க வேண்டும். மின்துறையை சீரமைக்கும் நடவடிக்கைகளை நிறுத்த சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட வேண்டும். பல்வேறு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உதவி திட்டங்களுக்கான கருத்துருக்களை மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்துள்ளது. அவற்றுக்கான ஒப்புதலை விரைவாக வழங்க பொருளாதார விவகாரங்கள் மற்றும் இதர மத்திய அரசுத் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கோடியை வழங்க இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.
எல்லைப் பகுதியில் அமைதியற்ற சூழல் தற்போது நிலவி வரும் சூழலில் உங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT