Published : 17 Jun 2020 09:41 PM
Last Updated : 17 Jun 2020 09:41 PM
பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகவர்கள் நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சகாயராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பதிவு தபால், விரைவு தபால், மணி-ஆர்டர் அனுப்புதல், தபால்தலை விற்பனை போன்ற சேவைகளை செய்வதற்கான முகவர்களை கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், கடம்பூர், கயத்தாறு, லட்சுமிபுரம், புதூர், விளாத்திகுளம், சங்கரன்கோவில், கழுகுமலை, புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம் (திருநெல்வேலி), ஆய்க்குடி, குற்றாலம், கடையநல்லூர், கீழப்பாவூர், கீழப்புலியூர், கிருஷ்ணாபுரம், பண்பொழி, மேலக்கரம், பாவூர்சத்திரம், சாம்பவார்வடகரை, செங்கோட்டை (தென்காசி), சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, வடகரை, வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் முகவர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். மேலும், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் செய்வதற்கு வசதியாக கம்ப்யூட்டர் வசதிகளை சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
வைப்புத்தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் முகவராகவும் செயல்பட முடியும். அஞ்சலக ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒவ்வொரு சேவைக்கும் உரிய கமிஷன் வழங்கப்படும். அஞ்சலக விதிகளின்படி தகுதி வாய்ந்த ஒரு முகவர் மட்டுமே 2020-2021-ம் ஆண்டுக்கு மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் ஏதேனும் ஒரு பகுதியில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் விவரங்களை அந்தந்த தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில்பட்டி அஞ்சலக கோட்டம், கோவில்பட்டி - 628 501.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25-6-2020. மேலும் விவரங்களுக்கு 04632-221013 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT