Published : 17 Jun 2020 05:06 PM
Last Updated : 17 Jun 2020 05:06 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மும்முரமாக நடந்து வந்தாலும் சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களால் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 31480 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு பின்னர் குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஏற்படுத்தப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, ப்த்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கரோனா பாதித்த காவல் ஆய்வாளர் சென்று வந்த காவல் நிலையம் மற்றும் பிற அலுவலகங்களிலும் தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மணவாளகுறிச்சி காவல் நிலையமும், ஆய்வாளர் சென்று வந்த கோட்டார் காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் காவல் நிலையம் வாரியாக போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT