Published : 17 Jun 2020 04:55 PM
Last Updated : 17 Jun 2020 04:55 PM
ஐசிஎம்ஆர்-ன் கீழ் சென்னையில் இயங்கிவரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-National Institute of Epidemiology) 2016 முதல் சுகாதார ஆராய்ச்சியின் அடிப்படைகள் (Health Research Fundamentals) என்ற இணையவழி இலவசச் சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான வகுப்புகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) செய்திக்குறிப்பு:
“இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கிவரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-National Institute of Epidemiology), 2016 முதல் சுகாதார ஆராய்ச்சியின் அடிப்படைகள் (Health Research Fundamentals) என்ற இணையவழி இலவசச் சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது.
இந்தப் படிப்பில் உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த கோட்பாடுகள், ஆராய்ச்சி வடிவமைப்பது மற்றும் நடத்துவது குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதுவரை நடந்த வகுப்புகள் மூலமாக, இந்தியா முழுவதும் இருந்து 29 ஆயிரத்து 500 மாணவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த இலவச இணையவழி வகுப்புகளில் சுகாதார ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத் துறை சார்ந்தவர்கள், பொது சுகாதாரத்துறை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவத் துறை சார்பில் பயில்வோர், விஞ்ஞானிகள், புள்ளியியல் துறை சார்ந்தவர்கள், பல் மருத்துவம், இளங்கலை மருத்துவம், மேலும் வேறு எந்தத் துறையைச் சார்ந்த பட்டதாரிகளும் சேரலாம்.
இந்தப் பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு 8 வாரங்களில் 20 மணி நேரம் பாடங்கள் இணைய வழியில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த இணையவழிக் கல்வி “இந்திய தொழில்நுட்பக்கழகம் – சென்னை (IIT MADRAS)ல் அமைந்திருக்கும் NPTEL மூலமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மிக அதிக அளவில் இணையம் மூலமாக திறந்த வழிக் கல்வியை NPTEL என்னும் திட்டம் வழங்குகிறது. காணொலிக் காட்சி, படவிளக்கக் காட்சி மற்றும் வினாடி வினா மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சி வகுப்பின் முடிவில் தேர்வுகள் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடத்தப்படும். தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதிச் சான்றிதழைப் பெற விரும்பாதவர்கள் இலவசமாகவே பயிற்சி பெறலாம்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
மின்னஞ்சல்: niecercourse@gmail.com
தொலை பேசி எண் : 044-26136420
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT