Published : 17 Jun 2020 04:07 PM
Last Updated : 17 Jun 2020 04:07 PM
சிறையில் கரோனா தொற்று பரவி வருவதால் ராஜிவ்காந்தி கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் விடுப்பு கேட்டு அவரது தாயார் அனுப்பிய மனுவை சிறைத்துறை நிராகரித்துள்ளது.
அருப்புக்கோட்டையச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்ற ரவி. இவர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவரை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சிறைத்துறைக்கு அனுப்பிய மனுக்கள் இதுவரை 14 முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, மதுரை, கடலூர், பாளையங்கோட்டை, திருச்சி சிறைகளில் 39 கரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானதால், ரவிச்சந்திரனை 3 மாதம் பரோலில் விடுவிக்கக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு மே 29-ல் விண்ணப்பம் அனுப்பினார்.
இந்த விண்ணப்பத்தை நிராகரித்து சிறை கண்காணிப்பாளர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் சிறை கண்காணிப்பாளர் கூறியிருப்பதாவது:
மத்திய வெடிபொருள் சட்டம், வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர் சட்டம், தடா சட்டத்தின் கீழ் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு 28.1.1998-ல் தூக்கு தண்டனை விதித்தது.
பின்னர் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. வேலூர் மத்திய சிறையில் இருந்த ரவிச்சந்திரன், 6.6.2009 முதல் மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
கரோனா தொற்று பரவி வரும் அசாதாரண சூழ்நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் மத்திய அரசின் செயல் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால், தமிழ்நாடு தண்டனை தள்ளி வைத்தல் விதிப்படி அவருக்கு பரோல் விடுப்பு வழங்க பரிசீலிக்க முடியாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரனின் பரோல் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது இது 15 வது முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT