Published : 17 Jun 2020 03:52 PM
Last Updated : 17 Jun 2020 03:52 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களைக் கள ஆய்வு செய்வதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் இ.இனியன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 குடைவரைக் கோயில்கள் அமைந்திருப்பதும், நார்த்தாமலை, கொடும்பாளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்கள தமிழகக் கோயில் கலை வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியைப் பறைசாற்றுவதும் இம்மாவட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.
மேலும், வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் இங்கு அதிக எண்ணிக்கையிலான தொல்லியல் சின்னங்கள் உள்ளன.
சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்த மக்களது இடுகாடுகள், கல்லறைகள், முதுமக்கள் தாழிகள் ஆகியன மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
அவற்றில் அகழாய்வு செய்யப்பட்ட சில இடங்களில் கிடைத்த மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், அணிகலன்கள் யாவும் மாநிலத்தின் 2-வது பெரிய அருங்காட்சியமாகமான புதுக்கோட்டையில் உள்ளன.
இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான இடங்களை ஆய்வு செய்து, தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தொல்லியல் துறையின் பரிந்துரைப்படி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையைப் பரிசீலித்த தொல்லியல் ஆய்வாளர்கள், முதல் கட்டமாகக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
பேராசிரியர் இ.இனியன்
இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாவியல் துறையின் உதவிப் பேராசிரியர் இ.இனியன், 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறியதாவது:
"புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான தொல்லியல் சின்னங்கள் இருப்பதால் இம்மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள அனுமதி கோரினோம். அனுமதியும் கிடைத்துவிட்டது. ஊரடங்கால் பணியைத் தொடங்க இயலவில்லை.
ஊரடங்கு முழு தளர்வுக்கு வந்த பிறகு தொல்லியல் ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அப்போது, கீழடி போன்ற இடங்களில் தற்போது பயன்படுத்தக்கூடிய ட்ரோன் மற்றும் தரையின் மேற்பகுதியில் இருந்தவாறே தரைக்கும் அடியில் உள்ள பொருட்களைக் கண்டறியக்கூடிய ஜிபிஆர் எனும் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.
அதன்பிறகு, அந்த ஆய்வு அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பார்த்துவிட்டு எந்த இடத்தில் அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறையினர் அனுமதி அளிக்கிறார்களோ அந்தந்த இடங்களில் அரசின் முழு ஒத்துழைப்புடன் அகழாய்வு செய்யப்படும்".
இவ்வாறு இனியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT