Published : 17 Jun 2020 03:28 PM
Last Updated : 17 Jun 2020 03:28 PM
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், அங்குள்ள குழுக்களுடன் இணைந்து கரோனா சோதனை, நோயாளிகள் நிலை, சோதனைக் கருவிகள் இருப்பு உள்ளிட்ட பல விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
''தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மண்டல சிறப்புப் பணிக்குழு, மாவட்ட சிறப்பு ஆதரவுக் குழு இணைந்து மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையிலான குழுக்களுடன் கண்காணிப்புப் பணியில் கீழ்க்கண்ட முறையில் செயல்பட வேண்டும்.
தினசரி எடுக்கப்படும் சோதனையில் தொற்றுள்ளவர்கள், மற்றவர்களின் நோய்த்தொற்று தொடர்பு குறித்துப் பட்டியல் தயாரித்து தினந்தோறும் கண்காணிக்க வேண்டும்.
சோதனை, சோதனை மாதிரிகள் எடுப்பது, சோதனை முடிவுகள் உடனடியாக சரியான நேரத்திற்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கண்காணிப்பது, தேர்வு செய்வது, நோய்த்தொற்றுள்ளவர்களைக் கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிப்பது, தேர்வு செய்வது, நோய்த்தொற்றுள்ளவர்களைக் கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் தடையின்றிக் கிடைக்கிறதா? முகக்கவசம், கவச உடைகள், பிபிஇ ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா? அவை சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும்.
மாவட்டங்கள், மற்ற பகுதிகளில் தீவிர சுவாசத் தொற்று நோயாளிகள், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்காணிக்க வேண்டும்.
கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய் சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
கிருமிநீக்க நடவடிக்கை தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்துவகை நலன் சார்ந்த பணிகளும் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் வழக்கமான பணிகளுடன் கோவிட் மேலாண்மைப் பணிகள், அத்திவாசியப் பொருட்கள் கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அரசு கரோனா தொற்றுப் பரவலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மாவட்ட வாரியாக கரோனா தடுப்புப் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் குழுக்களுடன் இணைந்து மாவட்ட அளவில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் செயல்படவேண்டும்.
அதிக அளவில் சோதனையில் கவனம் செலுத்துவது, நோய்த்தொற்றாளர்களின் தொடர்புகளைக் கண்டறிவது, நோயைத்தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதியில் வைப்பது ஆகிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்''.
இவ்வாறு தலைமைச் செயலர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT