

சென்னையில் இன்றும் கரோனா தொற்று குறையும் எனச் சொல்ல முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், பாண்டியராஜன் ஆகியோர் இன்று (ஜூன் 17) ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சென்னையில் 200 வட்டங்கள் இருக்கின்றன. அந்த 200 வட்டங்களிலும் ஒருங்கிணைப்பு வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் ஏ.இ. தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் 450-க்கும் மேலான காய்ச்சல் பரிசோதனை மையங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு, நீரிழிவு, ரத்த அழுத்தம், கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்துப் பரிசோதிக்கப்படும். ஏற்கெனவே நீரிழிவு, காசநோய் உள்ளவர்கள் குறித்து கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை 'ஹெல்த் ஏஜ்' மூலம் கண்காணித்து வருகிறோம்.
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
மக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் கரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்.
மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலின்படியே சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது ஒரு சங்கிலித்தொடர், அதனை உடைக்க வேண்டும். இது சமூகப் பரவலாக மாறக்கூடாது. இந்த ஊரடங்கு, தகுந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. முழு ஊரடங்கைக் கடைப்பிடித்தால் சென்னையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் ஒத்துழைப்பு அவசியம்" என தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "சென்னையைப் பொறுத்தவரை இம்முறை ஊரடங்கு மிகக் கடுமையாக இருக்கும். சென்னையில் நோய்ப்பரவல் அதிகமாக இருப்பதாலேயே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஒத்துழைப்பை மக்கள் கொடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்
அப்போது, சென்னையில் எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரியாத நிலையில் நேற்று (ஜூன் 16) தொற்று குறைந்தது குறித்து மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் கவுர் கேள்வியெழுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தொற்று நிலையாகக் குறையும்போதுதான் பரவல் குறைகிறது என நாம் சொல்ல முடியும். ஒரு நாள் குறைவதை வைத்து தொற்று குறைகிறது எனச் சொல்ல முடியாது. இன்றைக்கும் சென்னையில் தொற்று குறையுமா எனச் சொல்ல முடியாது. நேற்று சென்னையில் 19 ஆயிரத்து 242 பரிசோதனைகளை செய்துள்ளோம். இன்றைக்கு அதைவிட கூடுதலாகப் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். நேற்று குறைந்திருப்பது போன்று இன்றும் குறைய வாய்ப்பில்லை" எனத் தெரிவித்தார்.