Published : 12 Sep 2015 02:30 PM
Last Updated : 12 Sep 2015 02:30 PM
பருவநிலை மாற்றம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைந்து வருகிறது. இதனால், நீர் அறுவடை தொழில்நுட்பம் மூலமாக ஆண்டுக்கு முப்போகம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர் கோத்தர் பழங்குடியின விவசாயிகள்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 120 நாட்கள் மழை பெய்யும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழையும், நவம்பர் மாதத்தில் வட கிழக்குப் பருவ மழையும் பெய்யும். பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழையே, விவசாயம் மற்றும் குடிநீருக்கான ஆதாரம். இதன்மூலமாக ஒரு போகம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை இல்லாத காலத்தில், விவசாய நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.
இந்நிலையில், கோத்தகிரி அருகே திருச்சிக்கடி என்ற கோத்தர் பழங்குடியின கிராமத்தில், நீர் அறுவடை தொழில்நுட்பம் மூலமாக ஆண்டுக்கு முப்போகம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மூலமாக ‘பண்ணைக் குட்டை மாதிரி திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது.
காரட், புருக்கோலி, பூண்டு, கிழங்கு, காலிஃபிளவர், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களுடன் கால்நடைக்குத் தேவையான பசுந்தீவனமும் விளைவிக்கப்படுகிறது. இதற்கு ஆதாரமான தண்ணீருக்காக அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையில் அனைத்து நாட்களிலும் தண்ணீர் உள்ளது. இதில், மீன்கள் வளர்த்து கூடுதல் வருவாய் ஈட்டப்படுகிறது.
இதுதொடர்பாக பழங்குடியின விவசாயி கே.கண்ணகம்பட்டன் கூறியதாவது:
‘திருச்சிக்கடியில் 10 விவசாயிகள் ஒருங்கிணைந்து, பண்ணைக் குட்டை அமைத்து 9 ஏக்கரில் காய்கறி விவசாயம் மேற்கொள்கிறோம். மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் அறிவுரைப்படி, படிவட்டம் முறையில் விவசாயம் மேற்கொள்கிறோம்.
மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, ஓரங்களில் நேப்பியர் புற்கள் வளர்க்கிறோம்.
இந்த புற்கள், மண் பிடிமானத்தை அதிகரிப்பதுடன் கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகிறது. இதனால், மாடுகளில் இருந்து 2 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கிறது. அதன் சாணம், பயிர்களுக்கு உரமாகிறது.
குட்டையில் கண்ணாடி கெண்டை மீன்கள் வளர்ப்பதால், ஆண்டுக்கு 100 முதல் 200 கிலோ மீன்கள் பெறுகிறோம். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பு உள்ளதால், முப்போகம் சாகுபடி செய்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி கூ.கண்ணன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக சமச்சீராக மழை பெய்வதில்லை. இந்த ஆண்டு ஜூலையில் 25 சதவீதம், ஆகஸ்டில் 45 சதவீதம் மழை குறைந்துள்ளது. ஆனால், சராசரியாக 23 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
பருவம் தவறி பெய்யும் மழையே இதற்குக் காரணம். விவசாயம் மேற்கொள்ளப்படாத ஏப்ரல், மே மாதங்களில் அதிக மழை பெய்கிறது. சில நேரங்களில் மழை பொய்த்துவிடுவதால், விவசாயிகள் வாடகைக்கு நீர் வாங்கி பாய்ச்சுகின்றனர். நீலகிரியில் காய்கறி விவசாயத்துக்கு முதலீடு அதிகம். மழை பொய்த்துவிட்டால் நஷ்டம் அதிகம்.
தண்ணீருக்காக ஆழ்துளைக் கிணறு வெட்டப்படுவதால், செலவு அதிகமாகிறது. இதற்கு மாற்றான தொழில்நுட்பம்தான் நீர் அறுவடை.
இதற்குச் செலவு குறைவு, பயன் அதிகம். திருச்சிக்கடி கிராமத்தில் 130 கோத்தர் பழங்குடியினர் உள்ளனர். இப் பகுதியில் பண்ணைக் குட்டை அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது. இதன்மூலமாக ஆண்டுக்கு முப்போகம் சாகுபடி செய்கின்றனர். இதேபோல், பண்ணைக் குட்டை அமைத்து விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT