Published : 16 Jun 2020 07:48 PM
Last Updated : 16 Jun 2020 07:48 PM
முக்கியத் தலைவர்கள் வருகைக்காக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் காத்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று, கல்லணையைத் திறக்க வந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் காவிரித் தாய்க்காக மணிக்கணக்கில் காத்திருந்தார்கள்.
இன்று கல்லணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாகக் கல்லணை திறப்பு என்பது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணைக்கு வந்த பிறகு முடிவு செய்யப்படும் ஒன்றாகும். பாசனப் பகுதிகளில் குடிமராமத்து வேலைகள் எதுவும் நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்துவிட்டு எப்போது திறக்கலாம் என்று பாசனப் பகுதிகளில் உள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு அதன் பின்னர்தான் கல்லணை திறப்புக்கு நாள் குறிக்கப்படும்.
கல்லணை திறக்கப்படும் நாளில் மேட்டூர் தண்ணீரால் கல்லணை, கடல்போல நிறைந்திருக்கும். கல்லணையைப் பார்க்கும்போது எங்கெங்கும் நீக்கமறத் தண்ணீர் தேங்கி அவ்வளவு அழகாக இருக்கும். திறக்கும்போது அது பாய்ந்து ஓடும் ஓசை காதுகளை நிறைக்கும்.
ஆனால், இவை எதுவும் இல்லாமலே இன்று கல்லணை திறக்கப்பட்டது. காலை 11 மணிக்குக் கல்லணை திறக்கப்படும் என்று முன்பே அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதற்காக முதல் நாள் இரவே கல்லணையில் அலங்கார விளக்குகள் ஜொலித்தன. காலையில் கல்லணை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆகியோர் எல்லோரும் காலை 10.30 மணிக்கே கல்லணையில் தவறாமல் ஆஜராகியிருந்தனர். ஆனால், அங்கு ஆஜராகாமல் இருந்தது காவிரித் தண்ணீர் மட்டும்தான்.
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்புக்கே முனகி, முனகித்தான் மெல்ல வந்து சேர்ந்தது. அதை அப்படியே திறந்துவிட்டும்கூட அது அமைச்சர்களின் அவசரம் புரியாமல் மெல்லக் கல்லணையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இதனால் குறித்த நேரமான காலை 11 மணியைக் கடந்தும் கல்லணைக்குத் தண்ணீர் வந்து சேரவில்லை. ஆனாலும், அனைவரும் பொறுமை காத்தார்கள். ஒருவழியாக மதியம் 2 மணியளவில் மெல்ல மெல்ல ஆடி வந்து சேர்ந்தாள் காவிரித்தாய்.
ஓடி வர வேண்டியவள் ஏன் ஆடி வந்தாள்? என்று யாரும் கவலைப்படவும் இல்லை. கேள்வி கேட்கவும் இல்லை. வழிநெடுகிலும் மண்ணை அள்ளி ஆற்றைக் கெடுத்து விட்டதால்தானே இந்த அவலம் என்று யாருக்கும் சிந்திக்க நேரமும் இல்லை. அதனால், வந்த தண்ணீரைத் திறந்து விட்டுவிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த மலர்களை அள்ளி தண்ணீரில் தூவிவிட்டு, கடமை முடிந்த திருப்தியோடு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT