Published : 16 Jun 2020 03:15 PM
Last Updated : 16 Jun 2020 03:15 PM

டெண்டரே ஒதுக்காத போது முறைகேடு நடந்ததாக எப்படி வழக்கு போட முடியும்: ஆர்.எஸ்.பாரதி வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

சாலைகள் விரிவாக்கத்தில் டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அரசுத் தரப்பில் டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. டெண்டர் கோரப்படாத நிலையில் முறைகேடு என எப்படி வழக்குத் தொடர முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “வழக்கமாக ஆண்டுதோறும் டெண்டர் பிறப்பிக்கப்படும். ஆனால் இந்த டெண்டர் ஐந்து ஆண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டெண்டர் கோரும் போது ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். அந்த வகையில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும். தற்போது 800 கோடி ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிமி மீது லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அரசுத் தரப்பில், ''டெண்டரிலேயே யாரும் பங்கேற்காதபோது ஊழல் நடந்துள்ளதாக, அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தொடரபட்டுள்ளது. ஆர்.எஸ். பாரதி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்துவிட்டது. அது தொடர்பான புகாரை முடித்துவைத்தது குறித்து ஆர்.எஸ்.பாரதிக்கும் தகவல் அனுப்பியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார், டெண்டரே ஒதுக்காதபோது எப்படி ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்த முடியுமென கேள்வி எழுப்பியதுடன், வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்ததால் வழக்கை ஜூன் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x