Published : 16 Jun 2020 03:06 PM
Last Updated : 16 Jun 2020 03:06 PM
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியத் தரப்புக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் போல் சீன ராணுவத்துக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூவரில் ஒரு ராணுவ வீரர் பழனி என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி வயது 40.
பழனி கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இறுதியாக அவர் பீரங்கி படைப்பிரிவில் பயிற்றுநராக இருந்துள்ளார்.
அவருக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர். கடந்த 3-ம் தேதி (ஜூன் 3) பழனியின் குடும்பத்தினர் புதிதாக வீடு கட்டி இடம் பெயர்ந்துள்ளனர். அப்போது கூட விடுமுறை கிடைக்காததால் வரவில்லை.
இந்நிலையில், அவரது உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அவரது வீட்டாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT