Last Updated : 16 Jun, 2020 09:38 AM

 

Published : 16 Jun 2020 09:38 AM
Last Updated : 16 Jun 2020 09:38 AM

கரோனா தொற்று உள்ளவரின் குடும்பத்தில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை; சுகாதாரத்துறை விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்

விழுப்புரம்

கரோனா தொற்று உள்ளவரின் குடும்பத்தில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என, தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது 5-ம் கட்டமாக இம்மாதம் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.வருகின்ற 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 3 பேருக்கு முதலாவதாக கரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி நேற்று (ஜூன் 15) வரை 440 பேர் பாதிக்கப்பட்டனர். 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த ஒருவரையும் சேர்த்து மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், செஞ்சி அருகே ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸாரின் தாயார் பத்மினி பேசும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலானது. அதில் அவர், "என் மருமகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். என் மகனுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு எனக்கு ஆஸ்துமா உள்ளது என்று சொல்லி போராடியதால் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், வீட்டில் உள்ளவர்களை பரிசோதனை செய்யாமல் தனிமைப்படுத்தியுள்ளனர். தனிமைப்படுத்துவதால் மட்டுமே நோய் சரியாகுமா? வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசோதனை எடுக்க மறுக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் கேட்டபோது, "ஒருவருக்கு நோய் தொற்று இருந்தால் அவரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களில் நோய்க்கான அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை மேற்கொள்ளப்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்வதில்லை. 'ஸ்வாப் டெஸ்ட்' எனப்படும் பிசிஆர் டெஸ்ட் எடுக்கத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. இதில் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், சுகாதாரத்துறையினர் என சில துறையினருக்கு மட்டும் பிசிஆர் டெஸ்ட் எடுக்க அரசு உத்தரவிட்டது.

இது குறித்து சத்தியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மலர்விழியை தொடர்பு கொண்டு கேட்டபோது, மாவட்ட சுகாதார அதிகாரிகள், ஒருவருக்கு நோய்க்கான அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை மேற்கொள்ள சொல்லியுள்ளனர். மற்றவர்களுக்கு தேவையில்லை என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றனர்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமாரை கேட்டபோது, "கரோனா தொற்று கண்டறியப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வீடியோவில் பேசிய பெண்மணி குடியிருக்கும் வீட்டுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 1 கிலோமீட்டர்தான் இருக்கும். சோதனைக்கு உடனே வருமாறு அழைத்தபோது, ஆம்புலன்ஸ் வந்தால்தான் வருவோம் என்றனர். இதனால் அவர் சுகாதாரத்துறைமீது குற்றம்சாட்டுகிறார். நேற்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவரின் குற்றச்சாட்டு உண்மையல்ல" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x