Published : 15 Jun 2020 09:45 PM
Last Updated : 15 Jun 2020 09:45 PM
ஊரடங்கு, முழு ஊரடங்கு மாயையிலிருந்து அரசு வெளியே வந்து பரிசோதனைகளை விரிவாகவும் விரைவாகவும் செய்து தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்து வருவதும், குறிப்பாக சென்னையின் தொற்று தமிழக அளவில் 71 சதவீதம் இருப்பதும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதையடுத்து அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் பழனிசாமி வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தொற்று அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு என அறிவித்தார்.
இதை விமர்சித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“முழு ஊரடங்கு அமலாகும் என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதல்வர் சொன்னார். 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அவரே சொல்லி இருக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!
இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும். ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ, அது மட்டுமே கரோனாவுக்கான தீர்வு என்ற மாயையில் அதிமுக அரசு இருப்பதாகத் தெரிகிறது. முதலில் அந்த மாயையிலிருந்து அரசு வெளியே வர வேண்டும்.
பரிசோதனைகளை விரிவாகவும் விரைவாகவும் செய்தல், தொற்றுக்கான தொடர்புகளைக் கண்டறிதல், உரிய சிகிச்சை அளித்தல் மூலமாகவே கரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.
கரோனா ஒழிப்பு என்ற ஒன்றைத் தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், அனைத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT