Published : 15 Jun 2020 05:42 PM
Last Updated : 15 Jun 2020 05:42 PM
ஜூன் 19-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில் 2 ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்).
இவ்விரு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones), எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.
முழு ஊரடங்கின் போது, * 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
* அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT