Published : 15 Jun 2020 05:19 PM
Last Updated : 15 Jun 2020 05:19 PM
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதுபோல ஆதிச்சநல்லூரில் மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே சிவகளையில் 2 முதுமக்கள் தாழிகளும், ஆதிச்சநல்லூரில் 3 முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிவகளையில் இன்று மேலும் 2 முதுமக்கள் தாழிகள் முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர பாதி சிதிலமடைந்த 2 முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன. மேலும், முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்களும் பெருமளவில் கிடைத்து வருகிறது.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியிலும் தொடர்ந்து முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. இதையடுத்து மக்கள் வாழ்ந்த இடத்தைக் கண்டறியும் நோக்கத்தில் வீரளபேரி அருகிலும், ஆதிச்சநல்லூர் குளத்து கரையிலும் இரண்டு இடங்களில் தோண்டும் பணி நடந்து வருகிறது.
இதில் குளத்துக் கரையில் தோண்டப்பட்ட குழியில் பண்டைய மக்கள் புழக்கத்தில் இருந்த மண்கலயம் உள்ளிட்ட மண்ணால் ஆன சில பொருட்கள் தென்பட தொடங்கியுள்ளன.
இந்த பொருட்கள் முழுமையாக கிடைத்து, முதுமக்கள் தாழிகளை முழுமையாக தோண்டி எடுத்து, அதனுள் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்த பிறகு பண்டைய தமிழர்களின் பல்வேறு அடையாளங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT