Published : 15 Jun 2020 03:32 PM
Last Updated : 15 Jun 2020 03:32 PM
சென்னை குடிநீருக்குத் தங்கு தடையின்றித் தொடர்ந்து தண்ணீர் அனுப்பிடும் நோக்கத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் மேட்டூர் தண்ணீரைத் தேக்கிட, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், கடும் வெயிலாலும், தொடர்ந்து சென்னைக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. இதனால் சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது குறைக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 54 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழுக் கொள்ளளவான 47.50 அடியில் தற்போது 40.85 அடி தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்துள்ளது. கல்லணையில் இருந்து நாளை (16-ம் தேதி) கொள்ளிடத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்தத் தண்ணீர் 20-ம் தேதி கீழணைக்கு வந்து சேரும். அந்த நீரை அப்படியே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி, ஏரியை நிரப்பிட சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடவாற்றில் உள்ள பாசன மதகுகளின் ஷட்டர்கள், மற்றும் வீராணம் ஏரியின் இரு கரைகளிலும் உள்ள 23 பாசன மதகுகளின் ஷட்டர்களையும் சீரமைத்துள்ளனர். மேலும், வடவாற்றில் இருந்து ஏரிக்குத் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''வரும் 20-ம் தேதி மேட்டூர் தண்ணீர் கீழணைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தண்ணீர் வந்தவுடன் முழுவீச்சில் வீராணம் ஏரிக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். ஏரி நிரம்பிய பின்னர் பாசன வாய்க்கால்களில் விவசாய பாசனத்துத் தண்ணீர் திறக்கப்படும். சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். வீராணம் ஏரியில் தண்ணீர் நிரப்பிய பிறகே கீழணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT